சிறு, குறு, நடுத்தர தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் பிரச்சினைகளை களைய அரசு உரிய நடவடிக்கை

பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
சென்னை
சிறு, குறு, நடுத்தர தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் பிரச்சினைகளை களைய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ேபரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.
தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நேற்று நடைபெற்ற 2022- 2023- ம் ஆண்டு நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது:-
தாட்கோ மூலமாக வாங்கிய கடனை ரத்து செய்ய வேண்டுமென்று ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள். இதனை இந்த அரசு கனிவுடன் பரிசீலிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
நிதிநிலை அறிக்கை பக்கம் 54-ல், பேருந்து சேவைகளை நவீனமயமாக்கும் வகையில், 2,213 எண்ணிக்கையில் BS VI புதிய டீசல் பேருந்துகளும், 500 புதிய மின் பேருந்துகளும், கொள்முதல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
சென்ற ஆண்டு நிதிநிலை அறிக்கையில், 623 கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஜெர்மன் வளர்ச்சி வங்கி உதவியுடன், 1,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. எனவே, இதுகுறித்த நிலையினை, நிதி அமைச்சர் தனது பதிலுரையில் தெரிவிப்பார் என்று நம்புகிறேன்.
சென்ற ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையில், வேளாண்மை மற்றும் வீடுகளுக்கான இலவச மின்சாரம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இழப்புகளுக்கு நிதி வழங்க, 19,873 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை பக்கம் 55-ல், 2021-22-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இழப்பை, 100 சதவிகிதம் அரசே ஏற்க, 13,108 கோடி ரூபாய், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், நுகர்வோருக்கு வழங்கப்படும் மின்கட்டண மானியத்தை ஈடுசெய்வதற்காக, கூடுதலாக 9,379 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதன்படி பார்த்தால், சென்ற ஆண்டு மட்டும், 42,360 கோடி ரூபாய், எரிசக்தி துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அதே சமயத்தில், இந்த ஆண்டு எரிசக்தி துறைக்கு, 19,298 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வித்தியாசம் கூடுதலாக இருக்கிறது. குழப்பமும் நிலவுகிறது. இதனை நிதி அமைச்சர் தனது பதிலுரையில் தெளிவுபடுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
நிதிநிலை அறிக்கை பக்கம் 57-ல், நாளுக்கு நாள் மாறி வரும் தொழில் சூழலுக்கு தேவைப்படும் திறன் படைத்த மனித வளத்தை உருவாக்க, அரசு முன்னுரிமை அளித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. மனித வளத்தை உருவாக்கும் அதே சமயத்தில், தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும், அரசு ஏற்படுத்த வேண்டும். இதன்மூலம் தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளை, குறிப்பாக, பட்டாசு தொழிற்சாலைகளில் அடிக்கடி ஏற்படும் விபத்தினை தவிர்க்கலாம்.
இதில் இந்த அரசு தனி கவனம் செலுத்த வேண்டுமென்று, தங்கள் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன். நிதிநிலை அறிக்கை பக்கம் 58-ல், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு, மூலதன மானியமாக 300 கோடி ரூபாயும், கடன் உத்தரவாதத் திட்டத்திற்காக, 100 கோடி ரூபாயும், ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது வரவேற்கக்கூடிய ஒன்று என்றாலும், இவையெல்லாம், ஏற்கெனவே பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, எவ்விதத்திலும் பயனளிக்காது என்றும், மூல பொருட்களின் விலை உயர்வு என்பது பெரும் பிரச்சனை என்றும், அதிலிருந்து பாதுகாத்து நஷ்டத்தை தவிர்ப்பதற்கான அறிவிப்பு ஏதும் நிதிநிலை அறிக்கையில் இல்லை என்றும், திறன் மேம்பாட்டில் கவனம் அதிகம் செலுத்தப்பட்டாலும், வாய்ப்புகள் அதிகரிக்கப்படவில்லை என்றும், தங்களுடைய வலி தொடர்வதாகவும், இத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் லாபத்தில் இயங்கினால் தான், தமிழ்நாட்டின் வருவாய் அதிகரித்து, வேலைவாய்ப்பும் உருவாகும் என்பதில், யாருக்கும் இருவேறு கருத்து இருக்க முடியாது. எனவே, இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் பிரச்சினைகளை களைய இந்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.