தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை கைவிடும் முடிவை அரசு மறுபரிசீலனை – பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

சென்னை,
தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை கைவிடும் முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்தார்.
தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நேற்று நடைபெற்ற 2022- 2023-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது:-
நிதிநிலை அறிக்கை பக்கம் 38-ல், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதி திட்டம் என மாற்றியமைக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் துவக்கப்பட்ட தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை, இந்த அரசு கைவிடுகிறது என்பதுதான் இதன்பொருள்.
இதற்கு பதிலாக, அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயின்று, மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், இடைநிற்றல் இன்றி உயர்கல்வி படிக்கும் வரை, மாதம் 1,000 ரூபாய் அவர்கள் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து நேற்று முன் தினம் விளக்கம் அளித்த முதலமைச்சர், இந்த திட்டத்தில் தவறுகள் நடப்பதால், அதனை ரத்து செய்துவிட்டதாக குறிப்பிட்டு இருக்கிறார். தவறு நடந்தால், அதனை களைந்து அந்த திட்டத்தை தொடர்ந்து நடத்த வழிவகை செய்ய வேண்டுமே தவிர, அந்த திட்டத்தையே ரத்து செய்வது என்பது பொருத்தமாக இருக்காது.
ஏழை மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்குவதை நாங்கள் வரவேற்கிறோம். அதற்காக தாலிக்கு தங்கம் திட்டத்தை கைவிடுவதை நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது. இது முழுக்க, முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சி.
ஏழை மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும், அவர்கள் உயர் கல்வி பெறுவதை உறுதி செய்திட வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கிறது என்றால், அதனை செயல்படுத்தும் வகையில் ஒரு புதிய திட்டம் ஒன்றை நீங்கள் தொடங்கிட வேண்டும்.
அப்படி ஒரு திட்டம் தொடங்குவதை யார் தடுக்க போகிறார்கள்? அதை விடுத்து, ஏழை, எளிய பெண்களின் தாலியில் கை வைக்கின்ற இந்த செயல் சிறிதும் ஏற்புடையது அல்ல. எனவே, தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை கைவிடும் முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.