தற்போதைய செய்திகள்

எந்த கல்விக் கொள்கையை பின்பற்றுகிறீர்கள் – தி.மு.க. அரசு தெளிவுபடுத்த எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி

சென்னை

எந்த கல்விக் கொள்கையை தி.மு.க. அரசு பின்பற்றுகிறது என்று பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நேற்று நடைபெற்ற 2022-2023-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது:-

தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது தேசிய கல்விக் கொள்கையை கடுமையாக எதிர்த்தது. தி.மு.க. சார்பில் இந்த மாமன்றத்தில் பல்வேறு கருத்துகள் பதிவு செய்யப்பட்டன. தேசிய கல்விக் கொள்கை சமூக நீதி, கூட்டாட்சி, சமத்துவம் ஆகியவற்றிற்கு எதிராக இருக்கிறது என்று கூறி அதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் வகையில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையை கூட்ட வேண்டுமென்று, அன்றைக்கு குரல் கொடுத்தவர் முதலமைச்சர். மாநில கல்விக் கொள்கை புதிதாக உருவாக்கப்படும் என்று தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, புதிய கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களை கொண்ட உயர்மட்ட குழு ஒன்றை இந்த அரசு நியமிக்கும் என்று, சென்ற ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் கடந்த நிலையில், குழு அமைக்கப்பட்டதாக தெரியவில்லை. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும் அதுபற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை.

எனவே, இந்த அரசு பின்பற்ற போவது தேசியக் கல்வி கொள்கையா அல்லது மாநில கல்வி கொள்கையா என்பதை, தமிழ்நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்திட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

சென்ற ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையில், மருத்துவம் மற்றும் குடும்ப நலத் துறைக்காக 18,933 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 17,902 கோடி ரூபாய்தான், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. அதாவது, கிட்டத்தட்ட 1,031 கோடி ரூபாய், குறைக்கப்பட்டு இருக்கிறது.

கொரோனா தொற்று நான்காவது அலை வருவதை மறுக்க முடியாது என்றிருக்கின்ற நிலையில், தமிழக மக்களுக்கு மருத்துவச் சேவை இன்னும் அதிகமாக தேவைப்படும் என்னும் சூழ்நிலையில், இந்த நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவானது என்பதை, இந்த சமயத்தில் சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.

அம்மா மினி கிளினிக் ஒரு நல்ல திட்டம். கிராமப்புற மக்களுக்காக கொண்டு வரப்பட்டது. அந்தப் பணியாளர்களுக்கு அரசு ஏதாவது முன்னுரிமை கொடுத்து எதிர்காலத்தில் பணி வழங்க வேண்டும். அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு படித்தவர்கள். நல்ல மதிப்பெண் பெற்றவர்கள். அவர்களுக்கு உரிய நம்பிக்கையை இந்த அரசு தர வேண்டும்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.