தற்போதைய செய்திகள்

தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு மத்திய அரசிடம் பெறப்பட்ட நிதி எவ்வளவு? பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி

சென்னை

தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட நிதி எவ்வளவு? என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நேற்று நடைபெற்ற 2022-2023-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது:-

ஓர் ஊரில் ஒரு செல்வந்தர் இருந்தார். ஒரு நாள் அவர் தன் தோட்டத்தில் விளைந்த வாழைக்குலை ஒன்றை, பணியாளரிடம் கொடுத்து கோயிலில் கொடுக்க சொன்னார். அந்த ஏழை பணியாளர் எடுத்துச் செல்லும் வழியில், அவருக்கு அதிக பசியெடுக்கவே, அக்குலையிலிருந்து இரண்டு பழங்களை பிய்த்து சாப்பிட்டு விட்டார்.

மீதி பழங்களை கோயிலில் கொடுத்தார். அன்றிரவு செல்வந்தர் ஒரு கனவு கண்டார். அந்த கனவில் வந்த இறைவன், “நீ எனக்கு கொடுத்த இரண்டு பழங்களை நான் சாப்பிட்டேன், ருசியாக இருந்தது” என்றார். செல்வந்தருக்கு மிகவும் கோபம் வந்தது. “ஒரு குலை பழம் கொடுத்து அனுப்பியுள்ளேன். ஆனால், இரண்டு பழம் மட்டுமே இறைவனுக்கு போய் சேர்ந்திருக்கிறது. மீதி என்னவாயிற்று?” என கோபப்பட்டார்.

மறுநாள் காலை, அந்த பணியாளரை கூப்பிட்டு விசாரித்தார். அவர், இரண்டு பழங்களை மட்டும் பசியினால் தான் சாப்பிட்டதை ஒப்புக் கொண்டு, மீதி குலையை அப்படியே கோயிலில் கொடுத்து விட்டதாக சொன்னார். அப்போது தான் அந்த செல்வந்தருக்கு புரிந்தது.

அந்த ஏழை பணியாளர் சாப்பிட்ட பழம் மட்டுமே இறைவனை சென்றடைந்து இருக்கிறது என்று! இதனுடைய நீதி, “ஏழைக்கு உதவுங்கள், அது இறைவனுக்கு உதவியதாய் அர்த்தம்” என்பது தான். இந்த நிதிநிலை அறிக்கையில், அப்படி ஏதாவது ஏழைகளுக்கு உதவி செய்யப்பட்டிருக்கிறதா? என்று தேடி பார்த்தேன். பெரிதும் சிரமப்பட்டு தேடினேன். ஆனால், அவ்வாறு ஒன்றுமே இல்லை என்பது தான் கசப்பான, ஆனால் நிதர்சனமான உண்மை.

2022-2023-ம் ஆண்டிற்கான முழு வரவு செலவு திட்டத்திற்கு, வலுவான அடித்தளம் அமைப்பதே, 2021-2022-ம் ஆண்டு திருத்த வரவு செலவு திட்டத்தின் முதன்மை நோக்கமாகும் என்று, சென்ற ஆண்டு நிதித் துறை அமைச்சர் தெரிவித்து இருந்தார்.

அப்படி என்றால், இந்த நிதிநிலை அறிக்கையில், புதிதாக வருவாயை பெருக்குவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு இருக்க வேண்டுமே! செலவினங்களை கட்டுப்படுத்துவதற்கான புதிய நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு இருக்க வேண்டுமே! ஆனால், அப்படியன்றும் உருவாக்கப்பட்டதாக தெரியவில்லை.

நிதிநிலை அறிக்கை பக்கம்-13-ல், நாட்டின் மக்கள் தொகையில் தமிழ்நாட்டின் பங்கு 6.12 சதவீதமாகும் என்றும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏறத்தாழ 10 சதவீதமாகும் என்றும், இவற்றிற்கு ஏற்ப நிதி பகிர்வை மத்திய நிதிக் குழுக்கள் தமிழ்நாட்டிற்கு வழங்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதை நான் மறுக்கவில்லை.

மத்திய அரசின் வரிப் பங்கினை, அனைத்து மாநிலங்களுக்கும் சமமாக பிரித்துக் கொடுக்க வேண்டுமென்றால், அதற்கு முக்கிய அடிப்படை காரணியாக விளங்குவது மக்கள் தொகை தான். இதன் அடிப்படையில்தான், முதல் எட்டு நிதிக் குழுக்களில், மக்கள் தொகை காரணிக்கு 80 முதல் 90 விழுக்காடு முக்கியத்துவம், அதாவது weightage அளிக்கப்பட்டது.


ஆனால், இந்த முக்கியத்துவம், எட்டாவது நிதி குழுவிலிருந்து படிப்படியாக குறைக்கப்பட்டு, தற்போது 15-வது நிதிக்குழுவில், 15 விழுக்காடாக, நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மக்கள் தொகைக்கான காரணியின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டதன் காரணமாக, தமிழ்நாட்டின் பங்கு வெகுவாக குறைகிறது. அதே சமயத்தில், Distance, or, Income Distance, or, Fiscal Distance, என்ற காரணிக்கான weightage, கணிசமாக இருந்து வருகிறது. தற்போது 15-வது நிதிக்குழுவில், இதற்கான weightage, 45 விழுக்காடாக, நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த காரணியும் தமிழ்நாட்டிற்கு வரும் மத்திய வரிப் பகிர்வினை வெகுவாக குறைக்கிறது.

பத்தாவது நிதிக் குழு காலத்தில் (1995-2000), 6.637 சதவீதமாக இருந்த தமிழ்நாட்டின் வரிப் பகிர்வு, பதினொன்றாவது நிதிக் குழு காலத்தில், (2000-2005), 5.385 சதவீதமாகவும், பன்னிரெண்டாவது நிதிக் குழு காலத்தில், (2005-2010), 5.305 சதவீதமாகவும், பதின்மூன்றாவது நிதிக் குழு காலத்தில், (2010-2015), 4.969 சதவீதமாகவும், பதினான்காவது நிதிக் குழு காலத்தில், (2015-2020), 4.023 சதவீதமாகவும், 15-வது நிதிக் குழுவின் முதல் அறிக்கையின்படி, (2020-2021), 4.189 சதவீதமாகவும், இரண்டாவது அறிக்கையின்படி, (2021-2026) 4.079 சதவீதமாகவும் உள்ளது.
இதில் இன்னும் ஒரு கொடுமை என்னவென்றால், பதின்மூன்றாவது நிதிக் குழு வரை மக்கள் தொகை என்றால், 1971-ம் ஆண்டு மக்கள் தொகைதான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால், பதினான்காவது நிதிக் குழுவில், 2011-ம் ஆண்டு மக்கள் தொகையும், கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

தற்போது பதினைந்தாவது நிதிக் குழுவில், 1971-ம் ஆண்டு மக்கள் தொகை என்ற காரணியே நீக்கப்பட்டுவிட்டு, 2011-ம் ஆண்டு மக்கள் தொகை காரணி மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இனி வருங்காலங்களில், 1971-ம் ஆண்டு மக்கள் தொகை என்ற காரணி இடம்பெறாது என்ற சூழ்நிலை, தற்போது உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக, மக்கள் தொகை காரணியினால் நமக்கு வரும் வரிப் பகிர்வு, 1.525 விழுக்காடாக குறைகிறது. 1971-ம் ஆண்டு இந்திய மக்கள் தொகையில் 7.586 சதவீதமாக இருந்த தமிழ்நாட்டு மக்கள் தொகை 2011-ம் ஆண்டு கணக்குப்படி 6.1 சதவீதமாக குறைந்து விட்டது. மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்காக தமிழ்நாட்டிற்கு கிடைத்த பரிசு, இது.

இதற்கு காரணம், பதினான்காவது நிதிக் குழுவை அமைத்து மத்திய நிதி அமைச்சகத்தால், 02-01-2013 அன்று வெளியிடப்பட்ட அறிவிக்கைதான்.
அந்த அறிவிக்கையில், ஏழாம் பத்தியில் “… the Commission may also take into account the demographic changes that have taken place subsequent to 1971” என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதன் அடிப்படையில் தான், “2011-ம் ஆண்டு மக்கள் தொகை” என்ற காரணி, பதினான்காவது நிதிக் குழுவால் புதிதாக புகுத்தப்பட்டு, அதற்கு 10 விழுக்காடு weightage தரப்பட்டது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட மாநிலம், தமிழ்நாடு தான் என்பதை, அழுத்தந்திருத்தமாக இந்த மாமன்றத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்.
ஆனால், 1996 முதல் 2013 வரை இருந்த மத்திய அரசாங்கங்களை தாங்கி பிடித்த தி.மு.க., இதனை சுட்டிக்காட்டவும் முடியாமல், தட்டிக் கேட்கவும் செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது என்பது தான் நிதர்சனமான உண்மை.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி நடைபெற்ற சமயத்தில், மத்திய அரசிடமிருந்து பெற வேண்டிய பேரிடர் நிவாரண நிதி குறித்து அன்று எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. தொடர்ந்து விமர்சனம் செய்தது.
தற்போது, தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு பெய்த கனமழை காரணமாக, 6,230 கோடி ரூபாய், தமிழ்நாடு அரசு சார்பில் மத்திய அரசிடம் நிவாரணமாக கோரப்பட்டது. இதில் எத்தனை கோடி ரூபாய் நிவாரணம், மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்டது என்பது குறித்து இந்த நிதி நிலை அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. இதனை பதிலுரையில் தெளிவுபடுத்துமாறு நிதி அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.

சட்டம்- ஒழுங்கை திறம்பட நிலைநாட்டுவதன் வாயிலாக, தமிழ்நாடு ஓர் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது என்று, நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆனால், கொலை மற்றும் கொள்ளை குற்றங்கள் அன்றாடம் நடைபெற்று வருவதை பத்திரிகைகளும், தொலைக் காட்சிகளும் நாட்டிற்கு எடுத்துக்காட்டிக் கொண்டு வருகின்றன என்பதை மறந்துவிட வேண்டாம். எனவே, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் முனைப்புடன் இந்த அரசு செயல்பட வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

நகைக் கடன் தள்ளுபடி, தோராயமாக 6,000 கோடி ரூபாய் இருக்கும் என்று, தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்திருக்கின்ற நிலையில், இந்த நகைக்கடனுக்காக 1,000 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக, நிதிநிலை அறிக்கை பக்கம் 22-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கூட்டுறவு நிறுவனங்களில் வைப்புத் தொகை வைத்திருப்பவர்கள், தங்களது பணத்தை முதிர்வு காலம் முடிந்தும் பெற முடியாத சூழ்நிலை உள்ளதாகவும், ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் கிடைக்காத சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும், தகவல்கள் வருகின்றன. இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணுமாறு தங்கள் வாயிலாக அரசை நான் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை பக்கம்-22-ல், உணவு மானியமாக 7,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. இது சென்ற நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட தொகையான, 8,438 கோடி ரூபாயுடன் ஒப்பிடும்போது, 938 கோடி ரூபாய் குறைவாகவுள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.