தற்போதைய செய்திகள்

ஆரணியை தலைமையிடமாக கொண்டு மின் பகிர்மான வட்டம் -பேரவையில் முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கோரிக்கை

சென்னை,

ஆரணியை தலைமையிடமாக கொண்டு மின் பகிர்மான வட்டம் அமைக்க வேண்டும் என்று பேரவையில் முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கோரிக்கை விடுத்தார்.

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது முன்னாள் அமைச்சரும், கழக சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பேசியதாவது:-

தற்போது இயங்கி கொண்டிருக்கின்ற ஆரணி மேற்கு உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஆரணி கிராமியம் கிழக்கு, ஆரணி கிராமியம் மேற்கு, ஆரணி கிராமியம் களம்பூர், திருமணி ஆகிய 5 பிரிவு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த 5 பிரிவு அலுவலகங்களில் கிட்டத்தட்ட ஒவ்வொரு பிரிவு அலுவலகத்திற்கும் 10,000 மின் நுகர்வோர்கள் இருக்கிறார்கள்.

அவர்கள் சுலபமாக சென்று வர, விண்ணமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு ஒரு அலுவலகம் அமைத்தால் அது விவசாயிகளுக்கு மிகவும் ஏதுவாக இருக்கும். விண்ணமங்கலம் பகுதி ஆற்காடு- விழுப்புரம் பிரதான சாலையின் மைய பகுதியில் அமைந்துள்ளது. அங்கிருந்து கிட்டத்தட்ட விண்மங்கலத்தை சுற்றி 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருக்கின்றன.

அவர்கள் அனைவரும் கிட்டத்தட்ட 10 கிலோ மீட்டர் தூரம் உள்ள ஆரணிக்கு சென்றுதான் அத்தனை மின் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே விண்ணமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு ஒரு மின் பகிர்மான செயற்பொறியாளர் அலுவலகத்தை அமைத்து தர வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில், திருவண்ணாமலையில் 8 கோட்ட பொறியாளர்களை உள்ளடக்கிய ஒரு மின் பகிர்மான வட்டம் (எஸ்.சி.) இயங்கி வருகிறது.

இந்த அலுவலகத்தை பிரித்து ஆரணியை தலைமையிடமாக கொண்டு, ஆரணி, சேத்துப்பட்டு, செய்யாறு, வந்தவாசி ஆகிய பகுதிகளை இணைத்து ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு ஒரு மின் பகிர்மான வட்டம் அமைக்க ஏற்கெனவே அம்மாவின் அரசால் அப்போது மின்சாரத் துறை அமைச்சராக இருந்த தங்கமணியால் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காரணத்தினால் அது தடை செய்யப்பட்டது. எனவே மீண்டும் ஆரணியை தலைமையிடமாக கொண்டு ஒரு மின் பகிர்மான வட்டம் அமைக்க வேண்டும்.

இவ்வாறு முன்னாள் அமைச்சரும், கழக சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பேசினார்.