தற்போதைய செய்திகள்

அயப்பாக்கம் ஊராட்சியில் ரூ.1.80 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப்பணிகள் – அமைச்சர் பா.பென்ஜமின் தொடங்கி வைத்தார்

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம், அயப்பாக்கம் ஊராட்சியில் ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின், மாவட்ட ஆட்சித்தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் நேற்று ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்ட பணிகளை துவக்கி வைத்தனர்.

பின்னர் அமைச்சர் பா.பென்ஜமின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் நடக்கும, முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம், அயப்பாக்கம் ஊராட்சியில், பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக, ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் தனியார் நிறுவன பங்களிப்புடன் அயப்பாக்கம், வானகரம் மற்றும் அடையாளம்பட்டு ஆகிய ஊராட்சிகளில் தேங்கும் குப்பைகளை மக்கும் மற்றும் மக்கா குப்பை என பிரித்து, தனியார் நிறுவன பங்களிப்புடன் அமைக்கப்படவுள்ள குப்பையினை முழுமையாக உரமாக்கும் எக்கோமாக் இயந்திரம்,

கிருஷ்ணசாமி பள்ளி சாலை ரூ.09 லட்சம் மதிப்பீட்டில் ஃபேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி, அயப்பாக்கம் ஊராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் 14 எண்ணிக்கையிலான குப்பைகளை அள்ளும் மின்கல ஊர்திகளை ஊராட்சிமன்ற தலைவரிடம் வழங்கி, தந்தை பெரியார் நகர் பகுதியில் ரூ.8.13 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளன ஃபேவர் பிளாக் சாலைய, ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் ஆகியவை திறந்து வைக்கப்பட்டு, பவானி நகர் பகுதியில் ரூ.16 லட்சம் மதிப்பில் அமைக்கப்படவுள்ள மழைநீர் வடிகால்வாய்க்கு பூமிபூஜையும் மற்றும் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் தெருவில் ரூ.10 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால்வாய்க்கு பூமி பூஜையும் ஆக மொத்தம் ரூ. ஒரு கோடியே 80 லட்சம் மதிப்பிலான திட்டங்கள் அயப்பாக்கம் ஊராட்சிக்கு வழங்கப்பட்டது.

மேலும், முதலமைச்சர் கொரோனா வைரஸ் தொற்று பேரிடர் காலத்தில், அனைத்து வங்கியாளர்களை அழைத்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களை மேம்படுத்துவதற்காக 3,53,085 குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.7043 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

கோவிட் 19 கால கட்டத்தில் 1140 குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ. 130.89 கோடி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, 20 சதவிகிதம் கடன் உதவிகளை குறு, சிறு மற்றும் நடுததர தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டிற்கு வழங்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரத்தை பேணிக் காக்கின்ற அரசாக திகழ்கிறது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் பா.பென்ஜமின் கூறினார்.