தற்போதைய செய்திகள்

ரூ.64.90 லட்சம் மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்

கோவை

கோயம்புத்தூர் மாநகராட்சி, கல்கி கார்டன் பகுதியில் ரூ.64.90 லட்சம் மதிப்பில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணியை கழக அமைப்புச் செயலாளரும், கோவை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி சென்னை மாநகராட்சிக்கு அடுத்தப்படியாக பரப்பளவிலும், மக்கள் தொகைப் பெருக்கத்திலும் மிகப்பெரிய மாநகராட்சியாக விளங்கி வருகின்றது. கோயம்புத்தூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்குத் தேவையான ஏராளமான திட்டங்களை தமிழக முதலமைச்சரின் தனி கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, இப்பகுதி மக்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருகின்றது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டம், மேம்படுத்தப்பட்ட சாலைகள், காந்திபுரம் முதலடுக்கு மற்றும் இரண்டாம் அடுக்கு மேம்பாலங்கள், கூட்டு குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்ட பணிகள், வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், அத்திகடவு அவினாசி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி கோயம்புத்தூர் மாவட்டத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி திட்டங்கள் கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், கோயம்புத்தூர் மாநகராட்சியில் 91-வது வார்டு தொட்டராயன் கோவில் வீதி திட்ட சாலையில், மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.63.90 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட உயர்மட்ட கோபுர விளக்குகளுடன் கூடிய தெருவிளக்குகள், சி.பி.எம். கல்லூரி அருகில் உயர்மட்ட கோபுர விளக்குகளுடன் கூடிய தெருவிளக்குகளை பயன்பாட்டிற்கு நகராட்சி நிர்வாகம், ஊரகவளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, 91-வது வார்டு கல்கி கார்டன் பகுதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.64.90 லட்சம் மதிப்பில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி, தொட்டராயன் கோவில் வீதியில் குறுக்கு சாலைகளில் ரூ.6.90 லட்சம் மதிப்பில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி ஆகியவற்றையும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார், மாநகராட்சி துணை ஆணையாளர் மதுராந்தகி, உதவி ஆணையர்(தெற்கு) ரவி, மாநகராட்சி பொறியாளர் லட்சுமணன், பகுதி கழக செயலாளர் வி.குலசேகரன், பகுதி கழக துணைச் செயலாளர் எஸ்.எம்.உசேன், வார்டு கழக செயலாளர்கள் சித்திரை செல்வராஜ், எஸ்சி.செல்வராஜ், சி.தண்டபாணி, தமிழரசி கே.சுப்பிரமணி, அருணகிரி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ஆர்.சசிகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.