அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அம்மா மினி கிளினிக் மூடல் – விடியா தி.மு.க. அரசால் வேலையிழந்த மருத்துவ பணியாளர்கள் திண்டாட்டம்

விழுப்புரம்
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வேலையிழந்த மருத்துவ பணியாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து திண்டாடி வருகின்றனர்.
கழக ஆட்சியின் போது பொதுமக்களின் நலன் கருதி ஆரம்பிக்கப்பட்ட உன்னதமான திட்டம் அம்மா மினி கிளினிக் திட்டம்.
இத்திட்டத்தின் மூலம் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் 1800-க்கும் மேற்பட்டோர் பணியில் அமர்த்தப்பட்டனர். இப்போது விடியா தி.மு.க. அரசு அம்மா மினி கிளினிக் திட்டத்தை முடக்கி விட்டது.
இதையடுத்து அம்மா மினி கிளினிக் திட்டத்தில் பணிக்காக நியமிக்கப்பட்ட 1800 பேர் பணியில் இருந்து நீக்கப்பட்டதாக தி.மு.க. அரசு உத்தரவிட்டதோடு அவர்களுக்கான 3 மாத ஊதியத்தையும் வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது.
இதனால் வாழ்வாதாரத்தை இழந்த மருத்துவ பணியாளர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் 48-க்கும் மேற்பட்டோர் தங்களின் நிலைமை குறித்து செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:-
மக்களின் நலன் கருதி அம்மா மினி கிளினிக் என்ற உன்னத திட்டத்திற்காக நாங்கள் பணியமர்த்தப்பட்டோம். கொரோனா காரணமாக பல்வேறு இடங்களுக்கு பணி மாற்றம் செய்யப்பட்டோம். நாங்கள் எங்கள் உயிரை துச்சமென மதித்து கடினமாக உழைத்தோம். எங்களுக்கும், எங்களின் குடும்பத்தினர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட போதும் இடைவிடாது பணி செய்தோம்.
மேலும் கொரோனா தொற்று குறைந்த போது தடுப்பூசி முகாமில் எங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டோம். இப்போது எங்களை வேலையில் இருந்து இந்த அரசு நீக்கி விட்டதால் நாங்கள் குடும்பம் நடத்த முடியாமல் வாழ்வாதாரம் இழந்து நிற்கிறோம். எனவே எங்களை பணியில் நியமித்து ஊதியம் வழங்க வேண்டும். அவ்வாறு தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அரசை எதிர்த்து போராடுவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்று கண்ணீர் மல்க கூறினர்.