தற்போதைய செய்திகள்

மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன் குடமா? பேரவையில் அம்மன் கே.அர்ச்சுணன் எம்.எல்.ஏ. கேள்வி

சென்னை

மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடமா என்று சட்டப்பேரவையில் அம்மன் கே.அர்ச்சுணன் எம்.எல்.ஏ கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது கோவை வடக்கு தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுணன், கோயம்புத்தூர் மாவட்டம் வடக்கு தொகுதியில் அமைந்துள்ள மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் பக்தர்களின் வசதிக்காக ரோப்கார் அமைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சில விளக்கங்களை அளித்தார்.

இதைத்தொடர்ந்து அம்மன் ேக.அர்ச்சுணன் எம்.எல்.ஏ பேசியதாவது:-

சாத்தியக்கூறுகள் இல்லை என்று அமைச்சர் கூறி விட்டார். ஆறுபடை வீடுகளுக்கு அடுத்து ஏழாவது படை வீடாக விளங்கும் மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயில் பிரசித்தி பெற்ற கோயிலாகும்.

அமைச்சர் உண்மைக்கு மாறாக ஒரு கருத்தை சொல்லியிருக்கிறார். பிப்ரவரி மாதம் எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடியார் தலைமையிலானஆட்சியில் ரூ.3.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒப்பந்தப்புள்ளியும் கோரப்பட்டு, அடிக்கல்லும் நாட்டப்பட்டது.

அந்த அடிக்கல் நாட்டு விழாவில் நாலும் கலந்து கொண்டேன். ஆனால், தாங்கள் இப்பொழுது அந்த பணியை தமிழக முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைப்பார் என்பது எந்த விதத்தில் நியாயம் என்பது எனக்கு தெரியவில்லை. இது உண்மையிலேயே இதயதெய்வம் அம்மா அவர்களுடைய அரசினால் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

‘மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம்’ என்று கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதுபோன்று, யார் உடைத்தாலும் சரி, அங்கிருக்கும் மக்களுக்காக தயவு செய்து நீங்கள் ரோப்கார் வசதியையாவது செய்து கொடுக்க வேண்டும்.

இவ்வாறு கழக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுணன் பேசினார்.