தற்போதைய செய்திகள்

அம்மாவின் லட்சிய கனவை முதல்வர் படிப்படியாக நிறைவேற்றி வருகிறார் – அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் மகிழ்ச்சி

திண்டுக்கல்

புரட்சித்தலைவி அம்மாவின் லட்சிய கனவை முதலமைச்சர் படிப்படியாக நிறைவேற்றி வருகிறார் என்று அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தார்.

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் நல்லாம்பட்டி மற்றும் அகரம் பேரூராட்சி சுக்காம்பட்டி ஆகிய கிராமங்களில் பொது சுகாதாரத்துறை மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகளை சேவையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தொடங்கி வைத்து பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா வழியில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் முதலமைச்சர் தலைமையிலான தமிழக அரசு, அம்மா செயல்படுத்திய திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. முதலமைச்சர் தமிழக மக்களின் தேவை அறிந்து, கோரிக்கைகளுக்கு முன்பாகவே பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதால் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. தொழில்துறை உட்பட பல துறைகளில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை பெற்று விளங்குகிறது.

இந்தியாவிலேயே மருத்துவத்துறையில் தமிழ்நாடுதான் மிக சிறந்த மாநிலமாகவும், முன்னணி மாநிலமாகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறது. மாவட்டந்தோறும் ஒரு மருத்துவக் கல்லூரி என்ற தொலைநோக்கு பார்வையுடன் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்தார். புரட்சித்தலைவி அம்மாவின் லட்சிய கனவை, அவர் வழி நின்று செயல்படும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அதனை படிப்படியாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 65 இடங்களில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகள் செயல்படவுள்ளது. பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு செயல்படுத்தி வரும் இதுபோன்ற சிறப்புத் திட்டங்களை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் நத்தம் ரா.விசுவநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் ரா.கோவிந்தராசு, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் வி.நளினி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் வி.மருதராஜ், நத்தம் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், சீலப்பாடி தொடக்க வேளாண்மை வங்கி இயக்குநர் என்.ராஜசேகரன், முன்னாள் அகரம் பேரூராட்சி துணைத் தலைவர் சக்திவேல் அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.