தற்போதைய செய்திகள்

இது தான் கழக ஆட்சி, ஏழைகளுக்கு செய்கின்ற நன்மை

கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பெருமிதம்

கோவை,

7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி ஏழைகளின் குழந்தைகளின் மருத்துவக்கல்வி பயில அவர்களுக்கு கட்டணத்தையும் செலுத்தினோம். இது தான் கழக ஆட்சி. இது தான் ஏழைகளுக்கு செய்கின்ற நன்மை என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பெருமிதத்துடன் கூறி உள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்ச்சியில் கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-

அரசுப்பள்ளியில் 41 சதவீத மாணவர்கள் படிக்கிறார்கள். நீட் தேர்வை அவர்கள் எழுதி அதிக மதிப்பெண் பெற முடியவில்லை. நான் முதலமைச்சராக இருந்தபோது 2017ல் தமிழ்நாடு முழுவதும் 3145 மருத்துவ தேர்வில் அரசுப்பள்ளியில் படித்த 9 பேருக்கு சீட் கிடைத்தது.

நானும் அரசு பள்ளியில் படித்தவன். கடைக்கோடியில் இருக்கின்ற, ரத்தத்தை வியர்வையாக சிந்தி உழைக்கின்ற அந்த உழைப்பாளிகளின் குழந்தைகள் நீட் தேர்வை எழுதி அதிக மதிப்பெண் பெற முடியாத நிலையிலே அவர்கள் மருத்துவராக முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. அதனை எண்ணிப்பார்த்தேன். எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைக்கவில்லை. பொதுமக்கள் கோரிக்கை வைக்கவில்லை.

உணர்வுப்பூர்வமாக என் மனதில் தோன்றியது. நானும் அரசு பள்ளியில் படித்த மாணவன் என்ற காரணத்தினாலே இந்த முடிவை எடுத்தேன். ஏழை, எளிய மாணவர்கள் பல் மருத்துவராக முடியவில்லை. மருத்துவராக முடியவில்லை. அவர்களின் கனவை நனவாக்க வேண்டும் என்பதற்காக அரசின் சார்பாக 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை கொண்டுவந்து சட்டம் இயற்றி அமல்படுத்தினேன்.

அதன் காரணமான 560 பேர் இன்றைக்கு ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவர் படிப்பிற்கு தேர்வு பெற்றுள்ளார்கள். அதுமட்டுமல்ல இவர்களுக்கு சீட் கிடைத்தால் மட்டும் போதாது. அவர்களின் கல்வி கட்டணத்தை செலுத்த வேண்டும்.

எங்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சீட் கிடைத்து விட்டது. ஆனால் பணத்தை செலுத்தி படிக்க வைக்க முடியாத நிலை என்று சொன்னார்கள். ஏழைகளுக்காக உருவாக்கப்பட்ட கட்சி கழகம் என்பதால், எனவே ஏழைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், அந்த ஏழை குழந்தைகளும் மருத்துவராக வரவேண்டும் என்பதற்காக அந்த மருத்துவ கட்டணம் அனைத்தையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என்று உத்தரவு போட்டோம். இதுதான் கழக ஆட்சி. இதுதான் ஏழைகளுக்கு செய்கின்ற நன்மை.

இவ்வாறு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.