இந்தியா மற்றவை

இந்தியா வந்தடைந்த ரஃபேல் போர் விமானங்கள்

புதுடெல்லி

பிரான்ஸிடம் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி ரஃபேல் போர் விமானங்களில் முதற்கட்டமாக 5 போர் விமானங்கள் நேற்று பிற்பகல் இந்தியா வந்தடைந்தன.கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், 36 அதிநவீன போர் விமானங்களான ரஃபேல் விமானங்களை வாங்க பிரான்ஸ் நாட்டிடம் ஒப்பந்தம் போடப்பட்டது.

ரூ.60 ஆயிரம் கோடியில் போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் முதற்கட்டமாக 5 போர் விமானங்கள் இந்தியா கொண்டு வரப்பட்டன. பிரான்ஸிலிருந்து கிளம்பிய விமானங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தரையிறக்கப்பட்டு பின் இந்தியா வந்தடைந்தன. நடுவானில் பிரான்ஸ் விமானத்தின் மூலம் ரஃபேல் போர் விமானங்களுக்குத் தேவையான எரிபொருள் நிரப்பப்பட்டது.

இந்திய வான் எல்லைக்குள் வந்த ரஃபேல் போர் விமானத்தை இந்திய விமானப் படையின் 2 சுகோய் போர் விமானங்கள் வரவேற்று அழைத்து வந்தன.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஃபேல் போர் விமானங்கள் பிற்பகல் 3.30 மணியளவில் அம்பாலாவில் தரையிரங்கின.

இந்திய விமானப்படை தளபதி பாதுரியா 5 ரஃபேல் போர் விமானங்களையும் அம்பாலா விமானப் படை தளத்தில் வரவேற்றார்.ரஃபேல் போர் விமானங்களின் வருகையையொட்டி அம்பாலா பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படையில் இணைய இருக்கும் ரஃபேல் போர் விமானங்கள் நாட்டிற்கு கூடுதல் பலமாக அமையும் என நம்பப்படுகிறது.