சிறப்பு செய்திகள்

விருதுநகர் பாலியல் பலாத்கார வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரிக்கை -எதிர்க்கட்சி தலைவர் பேட்டி

சேலம்,

விருதுநகர் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரிக்கை வைப்போம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கேள்வி:- பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை முதல்வரின் துபாய் பயணம் குறித்து பேசியதற்கு 100 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க நோட்டீஸ் அனுப்பியுள்ளனரே?

பதில்:- அது அவர்களுடைய பிரச்சினை. அதில் நான் தலையிட விரும்பவில்லை. மக்கள் பேசுகின்ற பிரச்சினையைதான் சொல்கிறேன். ஸ்டாலின் அன்றைய தினம் எப்படி பேசினார். அப்பொழுது நாங்கள் 10 அமைச்சர்களையா கூட்டி கொண்டு சுற்றுலா சென்றோம். வெறும் 3 அமைச்சர்களை அழைத்து தான் சென்றோம்.

நாங்கள் யாரும் அரசு பணத்தை வீணடிக்க வில்லை. ஆகவே குடும்ப சுற்றுலா செல்ல வேண்டும் என்ற நோக்கில் இந்த சர்வதேச வர்த்தக கண்காட்சியை தமிழ்நாடு அரங்கை துவக்கி வைக்க வேண்டும் என்ற போர்வையில் போய் உள்ளார்கள்.

தமிழ் நாட்டிற்கு தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக சென்றாரா அல்லது தொழில் முதலீடு செய்ய போனாரா என்று மக்கள் கேட்கிறார்கள் அதை நாங்கள் சொல்லி தான் ஆக வேண்டும்.

கேள்வி:- விருதுநகர் கூட்டு பாலியல் பலாத்கார சம்பவம் குறித்து?

பதில்:- விருதுநகர் கூட்டு பாலியல் பலாத்கார சம்பவம் கடுமையாக கண்டிக்கத்தக்கது. இதை சட்டமன்றத்தில் தெரிவித்திருக்கிறேன். இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம். முறையாக நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் நாங்கள் நீதிமன்றங்கள் மூலம் சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரிக்கை வைப்போம். சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்றால் குடும்ப உறுப்பினர் யாராவது ஒருவர் அதை கொண்டு சென்றால் தான் சட்டம் இருக்கிற காரணத்தால் ஆகவே விசாரிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.

பொள்ளாச்சி பாலியல் சம்பவமே வேறு. இது வெளிவர காரணமே நாங்கள் தான். அந்த சம்பவத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று முதலில் புகார் கொடுத்தது அப்பொழுது துணை சபாநாயகராக இருந்த பொள்ளாச்சி ஜெயராமன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்தார். அவர் மீதே வேண்டும் என்று திட்டமிட்டு தவறான செய்திகளை பரப்பினார்கள். அதை நீதிமன்றம் சென்று ஆணை வாங்கியுள்ளது.

திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி பொறுப்பேற்று பத்து மாத காலத்தில் தொடர்ந்து கொலை, கொள்ளை, வழிப்பறி, எங்கு பார்த்தாலும் பாலியல் பலாத்காரம் அதிமாகி விட்டது. கொலை சம்பவத்தை தினந்தோறும் தொலைக்காட்சி, ஊடகம் மற்றும் பத்திரிகைகளில் பார்க்கிறோம். இதுவரை எந்த அரசாங்கத்திலும் நடைபெறாத பாலியல் பலாத்காரம் அதிகமாக நடைபெறுகின்ற ஒரு ஆட்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் ஸ்டாலின் தலைமையில் இருக்கின்ற அரசாங்கத்தில் தான்.

இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.