தமிழகம்

தொழிலாளர்கள் பிரச்சினையில் தி.மு.க. இரட்டை நிலைப்பாடு – எதிர்க்கட்சி தலைவர் சாடல்

சேலம்,

தொழிலாளர்கள் பிரச்சினையில் தி.மு.க. இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கேள்வி:- அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு தி.மு.க. கட்சி சார்பில் பொதுச்செயலாளர் ஆதரவு தெரிவிக்கிறார். ஆனால் அரசு அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கிறார்களே?

பதில்:- மூச்சுக்கு முன்னூறு தடவை ஜனநாயகத்தை பற்றி பேசுகின்ற தி.மு.க. இன்றைக்கு அவர்களுடைய நிலைப்பாட்டை சரியாக கூற வேண்டும். இரட்டை நிலைப்பாடு.

எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது தொழிலாளர்களுக்கு நன்மை செய்வது போல் வேடமளிப்பார்கள், ஆட்சியில் இருக்கும் பொழுது தொழிலாளர்கள் பாதிக்கப்படும் பொழுது குரல் கொடுக்க மாட்டார்கள், இதுதான் அவர்களுடைய நிலைப்பாடு.

கேள்வி:- அ.தி.மு.க. ஆட்சியின்போது 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் பல செயல்படுத்தப்படவில்லை என்கிறார்களே?

பதில்:- நான் ஏற்கனவே புள்ளி விவரத்தோடு சட்டமன்றத்தில் படித்து விட்டு வெளியே வந்து பேசினேன். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் 1704. அவர் கொடுத்த புள்ளி விவரத்தில் தோராயமாக 1167 அறிவிப்புகள் நிறைவேற்றியதாக அவரே ஒப்புக் கொள்கிறார்.

அதன்பிறகு 491 அறிவிப்புக்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மட்டுமல்லாமல் 2020, 2021ம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் பத்து மாத காலம் எந்த பணியும் செய்யவில்லை. 10 மாத காலம் எந்த பணியும் தொடங்க முடியாத ஒரு சூழ்நிலை. அந்த காலகட்டத்தில் 491 பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என அவர் ஒப்புக் கொள்கிறார். அந்த புத்தகத்திலேயே கொடுத்துள்ளார்.

இருபது பணிகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது, எப்போது என்றால் 2020, 2021-ம் ஆண்டின் கொரோனா காலகட்டத்தில் அரசு ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. எப்படி செயல்படுத்த முடியும். ஏன் இவர்கள் செயல்படுத்த வேண்டியதுதானே? அறிவித்ததை செயல்படுத்த முடியாதா, நாட்டு மக்களுக்கு தானே அறிவித்தோம்.

அதை செயல்படுத்த வேண்டும் இல்லையா? இவர்களுக்கு செயல்படுத்த மனம் கிடையாது. நாட்டு மக்களை பற்றி அக்கறை கிடையாது, நாட்டு மக்கள் மீது அக்கறை இருந்தால், கழக அரசு அறிவித்த அறிவிப்புகளை பயன்படுத்துவதுதான் முறை, யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்கு நன்மை செய்யத்தான் வருகிறார்கள்.

நாங்கள் மக்களுக்கு நன்மைகளை செய்ய திட்டங்களை போட்டோம், அறிவிப்புகளை அறிவித்தோம். அதை செயல்படுத்துங்கள். 26 அறிவிப்புகள் கைவிடப்பட்டதாக சொல்கிறார்கள். உண்மைதான். ஏனென்றால் ஒரு அறிவிப்பு வெளியிடும் பொழுது பல நடைமுறை சிக்கல்கள் வரும். ஏனென்றால் நீதிமன்றத்திற்கு சென்று விடுகிறார்கள். அடுத்து முடியாமல் இருப்பதற்கு, சிலவற்றிற்கு மத்திய அரசு அனுமதி வேண்டும். இப்படி 1704-ல் ஒரு 26 அறிவிப்பு கைவிடப்பட்டதாக சொல்கிறார்கள்.

இவையெல்லாம் நடைமுறை சிக்கல்களால் வந்ததுதான். ஆனால் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பில் 97 சதவீத பணிகள் நிறைவேற்றப்பட்டு விட்டன. நடந்து கொண்டிருக்கின்றன. இது ஸ்டாலினுடைய அறிவிப்பு. எங்களுடைய அறிவிப்பு இல்லை. 97 சதவீதம் கழக அரசு கொண் டுவந்த திட்டங்கள். 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அதோடு சிலவற்றை ஸ்டாலின் மறைத்து விட்டார். என்னவென்றால் ஒவ்வொரு பத்தாண்டு காலத்தில் துறை வாரியாக மானிய கோரிக்கை வரும்பொழுது அந்தந்த துறை அமைச்சர்கள் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள். அதை நிறைவேற்றி உள்ளோம்.

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழகத்தினுடைய முதலமைச்சராக பொறுப்பேற்ற பொழுது மாவட்ட ஆட்சியர்கள் கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் நடத்துவோம். உதாரணத்திற்கு சேலத்தில் மகரபூஷணம் மாவட்ட ஆட்சியராக இருந்தார். 5 பாலங்கள் அம்மாவிடம் கேட்டார். ஐந்து ரோடு பாலம், திருவகவுண்டனூர் பாலம், ஏ.வி.ஆர்.ரவுண்டானா பாலம், முள்ளுவாடி ரயில்வே கேட் அருகில் உள்ள பாலம், செவ்வாய்ப்பேட்டை பாலம் போன்ற பாலங்கள் எல்லாம் அன்றைய சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் மகரபூஷணம் இருக்கின்ற பொழுது கலெக்டர் மாநாட்டில் அம்மாவிடம் கோரிக்கை வைத்தார்.

இந்த மாதிரி பல திட்டங்களை மாவட்ட ஆட்சியாளர் கூட்டத்தில் அறிவித்து நிறைவேற்றினார். அதோடு நான் முதலமைச்சராக இருக்கும்போது பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா 32 மாவட்டங்களில் நடத்தினோம். அப்பொழுது 500-க்கும் மேற்பட்ட அறிவிப்புகளை அறிவித்து நிறைவேற்றினோம்.

இவ்வளவு திட்டங்களையும் கழக அரசின் அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்த பொழுதும், நான் முதலமைச்சராக இருந்த பொழுதும் நிறைவேற்றினோம். அதோடு நாங்கள் என்னென்ன திட்டங்களை கொண்டு வந்தோமோ? அந்த முடிவுற்ற பணிகளை தான் திறந்து வைத்து கொண்டிருக்கிறார்.

11 மருத்துவ கல்லூரிகளை ஸ்டாலின் கொண்டு வந்தாராம். எவ்வளவு வேடிக்கையாக உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் இப்பொழுதுதான் புதிதாக உருவாக்கி உள்ளோம். அப்பொழுதெல்லாம் அந்த மாவட்டம் உருவாகவில்லை. அதற்கும் கழக அரசில் மருத்துவ கல்லூரியை கொண்டு வந்தோம்.

ராணிப்பேட்டை, தென்காசி உள்ளிட்ட பல மாவட்டங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்துள்ளோம். 11 மருத்துவ கல்லூரிகளை ஒரே ஆண்டில் கொண்டு வந்து சாதனை படைத்த அரசாங்கம் அம்மாவுடைய அரசாங்கம்.
கேள்வி:- எட்டு வழிசாலை விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு கவலை அளிப்பதாக உள்ளளது. எட்டு வழிசாலை வருமா வராதா என விவசாயிகள் குழப்பத்தில் உள்ளார்களே?

பதில்:- தி.மு.க. ஆட்சியில் இருக்கும்போது ஒரு பேச்சு, எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு இரட்டை வேடம் போடுகிறார்கள். இப்பொழுது கொண்டு வருவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த தி.மு.க. அரசு இந்த எட்டு வழி சாலையை, எக்ஸ்பிரஸ் வே என்று பெயரை மாற்றி கொண்டு வருவதற்கு தி.மு.க. அரசு முயற்சி செய்கிறது. அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே இந்த திட்டம் முறையாக செயல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளதே தவிர கைவிடவில்லை.

இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாளன் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.