சிறப்பு செய்திகள் மற்றவை

சசிகலா கழகத்தில் இணைய எந்த வாய்ப்பும் இல்லை – எதிர்க்கட்சி தலைவர் திட்டவட்டம்

சேலம்,

சசிகலா கழகத்தில் இணைய எந்த வாய்ப்பும் இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கேள்வி:- சசிகலாவை அ.தி.மு.க.வில் இணைப்பது குறித்து?

பதில்:- பல தடவை கேட்ட கேள்வி. திருப்பி. திருப்பி கேள்வி கேட்கிறீர்கள். ஏற்கனவே இதற்கு பதில் சொல்லி விட்டோம். ஏனென்றால் தமிழ்நாடு அளவில் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் தலைமை கழகத்திலும் இதற்கான தீர்மானம் நிறைவேற்றி அறிவித்து விட்டோம். எல்லா பத்திரிகை மற்றும் ஊடகங்களில் வந்துள்ளது.

தமிழ்நாட்டில் இரண்டு மாவட்டங்கள் தவிர அனைத்து மாவட்டங்களிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தலைமை கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. ஏன் திருப்பி திருப்பி அந்த கேள்வியை கேட்கிறீர்கள்.

ஊடகத்தில் விறுவிறுப்பான செய்திகள் வரவேண்டும் என கேட்கிறீர்கள். மேலும் தலைமை மற்றும் மாவட்ட கழகத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு முடிந்து விட்டது. நிறைவேற்றப்பட்டதை யாராலும் புத்துயிர் கொடுக்க முடியாது.

கேள்வி:- ஆரம்பத்தில் கடுமையாக எதிர்த்த கழக ஒருங்கிணைப்பாளர் சின்னம்மா மேல் எனக்கு தனிபட்ட மரியாதை உண்டு என்று சொல்கிறாரே?

பதில்:- அரசியல் வேறு, தனிபட்ட கருத்து வேறு. இன்றைக்கு ஸ்டாலினுக்கும் எனக்கும் தனிபட்ட பிரச்சினை எதுவும் இல்லை. அரசியல் ரீதியாக தான் பிரச்சினை உள்ளது.

அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் பிரச்சினை இருக்காது. ஆனால் பொது பிரச்சினை தான். அந்த அடிப்படையில் அந்த கருத்தை அவர் கூறியிருக்கலாம்.

இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.