தற்போதைய செய்திகள்

மாணவர்கள் நலன் காக்கும் அரசு கழக அரசு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேச்சு

தூத்துக்குடி

மாணவர்கள் நலன் காக்கும் அரசாக கழக அரசு திகழ்கிறது என்று அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தொகுதிக்குட்பட்ட கடம்பூர் இந்து நாடார் மேல்நிலைப்பள்ளி, கயத்தாறு வீரபாண்டிய கட்டப்பொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளி, கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு 815 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி பேசியதாவது:-

காலத்தால் மாற்ற முடியாத சத்துணவு திட்டத்தை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் கொண்டு வந்ததை போல புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார். இந்த மகத்தான திட்டம். மற்ற மாநிலங்களும் பின்பற்றும் திட்டம் ஆகும்.

புரட்சித்தலைவி அம்மா தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற கல்வித்துறையை முன்னேற்றினால் நமது மாநிலம் விரைந்து முன்னேறும் என்ற அடிப்படையில் தலைசிறந்த மாணவர்களை உருவாக்கிட மாணவ, மாணவிகளின் இன்னல்களை தீர்க்கும் வகையில் காலணி முதல் கணினி வரை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். அதன் காரணத்தால் இந்தியாவிலேயே கல்வியில் முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது.

பள்ளி கல்வித்துறையில் மட்டுமின்றி உயர்கல்வியிலும் முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது. உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நடவடிக்கையால் தற்போது 49 சதவீதமாக உயர்ந்துள்ளது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வழியில் வந்த முதலமைச்சரும் மாணவர்களின் நலன் காக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

முதலமைச்சர் கொண்டு வந்த, மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் காரணமாக தமிழகம் முழுவதும் 400க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பள்ளியில் பயின்ற 11 மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.

இவ்வறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசினார்.