சிறப்பு செய்திகள் மற்றவை

பிஞ்சிலேயே பழுத்து விட்டதால் உதயநிதி பெண்களை இழிவுபடுத்தி பேசுகிறார் – இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி தாக்கு

சென்னை

கழகத்தினர் என்றும் கண்ணியத்துடன் தான் பேசுவார்கள். பிஞ்சிலேயே பழுத்து விட்டதால் பெண்களை இழிவுபடுத்தி உதயநிதி பேசுகிறார் என்று இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

சென்னை, வானகரத்தில் நேற்று நடைபெற்ற கழக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-

உள்ளாட்சித்தேர்தலில் சாதனை படைத்தோம். கூட்டுறவு சங்கத்தேர்தலில் 98 சதவிகிதம் வெற்றியை நிலைநாட்டிய அரசு நம்முடைய அரசு. ஆகவே, நம்முடைய கழக முன்னோடிபொறுப்பாளர்கள் பல பதவிகளில் வருவதற்கும் அம்மாவின் அரசு துணை நின்றது என்பதை இந்த நேரத்தில் தெரிவிக்க விரும்புகிறேன். எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியதன் காரணமாக, மீண்டும் நாம் வரவேண்டுமென்று மக்கள் நினைத்த காரணத்தால் உள்ளாட்சித் தேர்தலில் அதிகமான இடங்களை நாம் கைப்பற்றினோம்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவினர் கவர்ச்சிகரமான, நிறைவேற்ற முடியாத திட்டங்களை, மக்கள் மனதை மாற்றுகின்ற விதமாக, ஆசை வார்த்தைகள் சொல்லி அறிவித்தார்கள். அதன் மூலமாக, கொல்லைப்புறம் வழியாக வெற்றியை பறித்து விட்டார்கள். உண்மையாக வெற்றி பெறவில்லை. வெற்றிபெற்ற பிறகாவது ஏதாவது செய்தார்களாவென்றால், அதுவும் கிடையாது. அதற்குப்பிறகு நடந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் கழகம் தான் தொடர வேண்டுமென்று சான்று கொடுத்த தேர்தல். விக்கிரவாண்டியில் 46 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் நாங்குநேரியில் 34 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றிபெற்றோம்.

ஆகவே, நாடாளுமன்றத்தேர்தல் வேறு, சட்டமன்றத் தேர்தல் வேறு. சட்டமன்றத்தேர்தல் என்பது தமிழகத்தை ஆள்வதற்காக என தமிழகத்தை ஆளுகிற தகுதி கழகத்திற்கு உள்ளது என்பதை இந்தத் தேர்தல் மூலம் வாக்காளர் பெருமக்கள் நமக்கு நற்சான்றிதழ் கொடுத்துள்ளார்கள். நிலக்கோட்டை இடைத்தேர்தல் மற்றும் நிலக்கோட்டை தொகுதியை உள்ளடக்கி நாடாளுமன்றத் தேர்தலில், நாடாளுமன்றத்தில் அவர்கள் வெற்றி பெற்றார்கள். ஆனால், சட்டமன்ற இடைத்தேர்தலில் நம்முடைய வேட்பாளர் ஏறத்தாழ 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மாநிலத்தில் யார் ஆள வேண்டும், மத்தியில் யார் ஆள வேண்டுமென்ற ஒரு நிலைப்பாட்டை எடுத்து மக்கள் வாக்களிக்கின்றனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் நமக்கு சற்று தொய்விருந்தாலும், சட்டமன்றத் தேர்தலில் கழகம் தான் ஆளவேண்டுமென்று மக்கள் விரும்புகிறார்கள். முன்னாள் அமைச்சர், இலக்கிய அணி செயலாளர் வரவேற்புரை ஆற்றும்போது, வேண்டுமென்றே சிலர் கொச்சைப்படுத்தி பேசுகிறார்கள் என்று சொன்னார்கள். பெண் குலத்தை இழிவுபடுத்துகிற பேச்சை உதயநிதி பேசினார். அவர் நம்மைப் பேசவில்லை, பெண்குலத்தையே இழிவுபடுத்திப் பேசியிருக்கும் உதயநிதி ஸ்டாலினே நீங்கள் பிஞ்சிலே பழுத்துவிட்டீர்கள். ஏனென்றால், உங்கள் வளர்ப்பு அப்படி இருக்கிறது. விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா முளைக்கும் என்று கிராமத்தில் சொல்வார்கள். எனக்கு முன்னால் பேசிய மதுசூதனன் எவ்வளவு கண்ணியமாகப் பேசினார். நாகரீகமாக இதைப் பேசவில்லையென்று அந்த வார்த்தையைச் சொல்லவில்லை. அது தான் கழகத்திற்கும் உங்களுக்குமுள்ள வேறுபாடு.

இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.