ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்து வருகிறது தி.மு.க. அரசு

முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குற்றச்சாட்டு
மதுரை
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு பேச வாய்ப்பு கொடுக்காமல் ஜனநாயகத்தின் குரல்வளையை தி.மு.க. அரசு நெரித்து வருகிறது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரை மாநகர் மாவட்டம் 71-வது வட்ட கழகம் சார்பில் பழங்காநத்தம் பேருந்து நிலையம் அருகே நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. வட்ட கழக செயலாளர் பழங்காநத்தம் கே.ராஜாராம் தலைமை தாங்கினார். பகுதி செயலாளர்கள் முத்துவேல், கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ நீர், மோர் பந்தலை திறந்து வைத்து பேசியதாவது:-
ஆட்சியில் இருந்தாலும், ஆட்சியில் இல்லை என்றாலும் கூட மக்களுக்கு தொண்டு செய்யும் ஒரே இயக்கம் கழகம் மட்டும் தான். அது மட்டுமல்லாது இன்றைக்கு தமிழகத்தின் ஜீவாதார பிரச்சினைகள் என்றாலும், மக்களுக்கு அடிப்படை திட்டங்கள் என்றாலும் முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வரும் ஒரு இயக்கம் கழகம் தான். ஆனால் தி.மு.க மக்கள் நலனை ஒரு போதும் எண்ணி பார்க்காது.
அம்மா அரசில் கொண்டு வரப்பட்ட திட்டங்களையெல்லாம் தி.மு.க மூடு விழா நடத்துகிறது. இதற்கெல்லாம் மேலாக சட்டசபையில் பட்ஜெட் குறித்த விவாதத்தில் 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்த கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் பேசும்பொழுது அதற்குரிய விளக்கம் தராமல் அவையை புறக்கணித்து விட்டு நிதியமைச்சர் சென்றுள்ளார்.
பொதுவாக ஆளுங்கட்சி பேசும்போது எதிர்க்கட்சி தான் புறக்கணிக்கும். ஆனால் இன்றைக்கு எதிர்க்கட்சி பேசும் போது ஆளும் கட்சி அமைச்சரே புறக்கணித்து சென்று உள்ளார். மக்கள் நலன் குறித்து பேசியபோது புறக்கணித்து சென்ற நிதிஅமைச்சரை மக்களே விரைவில் புறக்கணிப்பார்கள்.
ஆட்சிக்கு வந்த 10 மாதங்களில் 2 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் கடன் சுமையை ஏற்றி விட்டது தி.மு.க. இதுபோன்ற குளறுபடிகள் குறித்து சட்டமன்றத்தில் கேள்வி கேட்க எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. எதிர்க்கட்சியினர் பேச சரியான வாய்ப்பு கொடுக்காமல் ஆளுங்கட்சிக்கு அதிக வாய்ப்பு கொடுத்து ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்து விட்டது தி.மு.க. அரசு.
எதிர்க்கட்சி என்பது சோற்றை பதம் பார்க்கும் அகப்பை என்று பேரறிஞர் அண்ணா கூறியிருந்தார். அது போலத்தான் இன்றைக்கு நாங்கள் செயல்படுகிறோம். உக்ரைன் நாட்டிலிருந்து 1890 மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான மருத்துவப்படிப்பு வசதியை ஏற்படுத்த அரசு முன் வர வேண்டும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக துணை செயலாளர் ராஜா, மாவட்ட கழக பொருளாளர் அண்ணாதுரை, அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், மாவட்ட மாணவரணி துணை செயலாளர் விக்ரம் மற்றும் ஜெயராஜ், லக்கி முருகன், ஹரிராம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.