தற்போதைய செய்திகள்

கோவை மாநகராட்சி பட்ஜெட்டை எதிர்த்து கழக மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு

கோவை

புதிய அறிவிப்புகள் இடம்பெறாத கோவை மாநகராட்சி பட்ஜெட்டை எதிர்த்து கழக மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

கோவை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் நேற்று தாக்கல் செய்தார். இதில் கழகம். தி.மு.க. காங்கிரஸ் உள்ளிட்ட காட்சிகளை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அப்போது பட்ஜெட்டில் எந்த புதிய அறிவிப்பும் இல்லை என்று கூறி, கழக கவுன்சிலர்களான இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட இணை செயலாளர் டாக்டர் ஷர்மிளா சந்திரசேகர், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ஆர்.பிரபாகரன், பகுதி கழக துணை செயலாளர் கோவை புதூர் டி.ரமேஷ் ஆகியோர் வெளி நடப்பு செய்தனர்.

பின்னர் கழகத்தை சேர்ந்த 47-வது மாமன்ற உறுப்பினரும், அம்மா பேரவை மாவட்ட செயலாளருமான ஆர்.பிரபாகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோவை மாநகராட்சிக்கான பட்ஜெட் நிதிநிலையை நேற்று அறிக்கை வாசித்தனர்.கூட்டம் ஆரம்பிக்கும் முன்பு
தீண்டாமை ஒழிப்பையே தவறாக படிக்கிறார்கள். இது கோவை மாநகர மக்களுக்கு வந்த சோதனை என்று தான் கூற வேண்டும்.

மாநகராட்சியில் எந்த புதிய திட்டங்களும் இல்லை. அறிவிப்பும் இல்லை. கோவைக்கு திட்டங்கள் வரும் என எதிர்பார்த்து வந்தோம். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடுகள் எல்லாம் சென்று வந்திருக்கிறார். ஆகவே கோவை மாநகராட்சிக்கு புதிதுபுதிதாக திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று வருகை தந்தோம்.

ஆனால் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் ஏமாற்ற கூடியதாகவே இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.
தொழில்துறை, பொதுமக்கள் என அனைத்து துறைக்கும் உதவாத பட்ஜெட்டாக உள்ளது.

காலி பெருங்காய டப்பாவில் வாசம் மட்டும் தான் வரும் என்பது போல் இந்த பட்ஜெட் உள்ளது. எனவே அதிமுக சார்பில் இந்த பட்ஜெட்டை புறக்கணித்து வெளிநடப்பு செய்கிறோம். மேலும் நடைமுறையில் உள்ள திட்டங்களை தவிர புதிய திட்டங்கள எதையும் தாக்கல் செய்யவில்லை. ஆகவே இந்த பட்ஜெட்டை புறக்கணிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.