தி.மு.க. அமைச்சரவையில் இருந்து ராஜகண்ணப்பனை நீக்காதது ஏன்?

கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கேள்வி
கிருஷ்ணகிரி
சமூக ரீதியாக அரசு அலுவலர்களை விமர்சனம் செய்த ராஜகண்ணப்பனை தி.மு.க. அமைச்சரவையில் இருந்து நீக்காதது ஏன்? என்று கழக துணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.
கழக துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. கிருஷ்ணகிரியில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதலமைச்சர் துபாய் சுற்றுப்பயணத்தில் பல்வேறு விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஆதாரங்களுடன் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அவரது குற்றச்சாட்டுக்கு தமிழக முதலமைச்சர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.
பொது வாழ்வுக்கு வரும் தலைவர்கள், அமைச்சர்களுக்கு நாவடக்கம் மிக முக்கியம். ஒரு சமூகத்தை பற்றி விமர்சிக்க அரசியலமைப்பு சட்ட ரீதியாக யாருக்கும் உரிமை கிடையாது. இப்படி இருக்கும் போது தி.மு.க. அமைச்சர் ராஜகண்ணப்பன் சமூக ரீதியாக அரசு அலுவலர்களை பேசி உள்ளார். அவரை முறைப்படி முதலமைச்சர் அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்து வழக்குப்பதிவு செய்திருக்க வேண்டும். செய்வாரா முதலமைச்சர்?
இவ்வாறு கழக துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. கூறினார்.
பேட்டியின்போது கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கே.அசோக்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன், கிருஷ்ணகிரி ஊராட்சிக்குழு தலைவர் அம்சா ராஜன், நகர கழக செயலாளர் கேசவன், ஒன்றிய கழக செயலாளர்கள் கன்னியப்பன், சோக்காடி ராஜன், சைலேஷ் கிருஷ்ணன், மாவட்ட அம்மா பேரவை தங்கமுத்து, நகர்மன்ற துணைத்தலைவர் வெங்கடாசலம், மாவட்ட சிறுபான்மை பிரிவு மக்பூல் மற்றும் பலர் உடனிருந்தனர்.