தற்போதைய செய்திகள்

ஸ்டாலினின் அவதூறு பிரச்சாரத்தை முறியடிக்க தயாராக இருப்போம் – கழக உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்

சென்னை

ஸ்டாலினின் அவதூறு பிரச்சாரத்தை முறியடிக்க நாம் தயாராக இருக்க வேண்டும் என்று கழக நிர்வாகிகளுக்கு இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை, வானகரத்தில் நேற்று நடைபெற்ற கழக செயற்குழு-பொதுக்குழுக் கூட்டத்தில் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-

ஸ்டாலின் வேண்டுமென்றே செல்கிற இடங்களிளெல்லாம் அவதூறு பேச்சு, தினந்தோறும் பொய் அறிக்கை. அதைத்தான் அவருடைய வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். அவற்றையெல்லாம் முறியடிக்க நாமும் தயாராகிவிட வேண்டும். அதற்கு சரியான பதில் சொல்லாவிட்டால் அது உண்மையாகிவிடும். ஒரு பொய்யை திருப்பித் திருப்பிச் சொல்லி உண்மையாக்க பார்க்கிறார்கள்.

ஒரு பொய்யை பொருந்துவதுபோல் சொன்னால் மெய் திரு, திருவென்று முழிக்கும் என்று கிராமங்களில் சொல்வார்கள். ஆக, ஒரு பொய்யை தொடர்ந்து பேசி இந்த ஆட்சி மீது களங்கத்தைக் கற்பிக்க ஸ்டாலின் முயற்சிக்கிறார். அதை முறியடிக்க வேண்டுமென்று உங்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். ஆட்சியும், கட்சியும் சிறப்பாக இருப்பதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால், இப்படிப்பட்ட அறிக்கையை ஸ்டாலின் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில்கூட, ஆளுநரை சந்தித்து ஒரு பொய்யான அறிக்கையை கொடுத்துள்ளார். ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்று சொல்வார்கள். ஏற்கனவே ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலைத் துறை மூலமாக டெண்டர் விடப்பட்டு அது ரத்து செய்யப்பட்டு விட்டது. இப்போதுதான் நாம் அந்தத் டெண்டரையே அறிவிக்கின்றோம். அதில், ஊழல் செய்து பணத்தை எடுத்துவிட்டாரென்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அப்படியானால், எந்தளவிற்கு நம் மீது எரிச்சல் அடைந்திருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ஒரு பொய்யான செய்தியைக்கூட நிஜமாக்கி ஆளுநரிடமே கொடுக்கிறார்கள் என்றால், நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அரசைப் பொறுத்தவரை மடியிலே கனமில்லை, வழியிலே பயமில்லை.

நான் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறபோது, ஸ்டாலின் நீங்கள் வாருங்கள், நீங்கள் கூப்பிடும் இடத்திற்கு நான் வருகிறேன் என்று அழைத்தேன். அவரால் சந்திக்க முடியாது. ஏனென்றால் ஆளுநரிடம் கொடுக்கப்பட்ட மனுவில் உண்மையே கிடையாது, அத்தனையும் பொய். பத்திரிகைகளில் வரவேண்டும், இந்த அரசு மீது அவதூறு செய்தியைப் பரப்ப வேண்டும், கட்சி மீது களங்கம் கற்பிக்க வேண்டுமென்பதுதான் அவர்களின் எண்ணமேயொழிய மற்ற ஒன்றும் இல்லை. அதைத் தெளிவுபடுத்தத்தான் நான் இதைச் சொல்கிறேன். இதையும் நாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

அந்த அறிக்கைகளையெல்லாம் மாவட்டச் செயலாளர்கள் மூலம் உங்களுக்கு அனுப்புகின்றோம். எப்படியெல்லாம் பொய் அறிக்கை விடுகிறார், எப்படியெல்லாம் ஆளுநரிடம் தவறான செய்தியை தெரிவிக்கிறார் என்பதற்கு நாம் மறுப்பு கொடுத்து பேசவேண்டும்.திமுகவின் 13 முன்னாள் அமைச்சர்கள் மீது நீதிமன்றத்தில் ஊழல் குற்றச்சாட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதை மறைப்பதற்குத்தான் ஸ்டாலின் நம் மீது பழி சுமத்திக் கொண்டிருக்கிறார்.

இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.