தற்போதைய செய்திகள்

மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டம்-அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என மக்கள் குற்றச்சாட்டு

அம்பத்தூர்

மதுரவாயல் பகுதியில் இரவு நேரத்தில் ஏற்பட்ட தொடர் மின்வெட்டால் கடும் அவதிக்குள்ளான மக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டம் நடத்தினர். அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்று சரமாரியாக குற்றம் சாட்டினர்.

சென்னை மதுரவாயல் வேல்நகர், எம்.எம்.டி.ஏ காலனி பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இரவு நேரங்களில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை மதுரவாயல் மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளனர். ஆனால் அதற்கு அதிகாரிகள் அலட்சியமாக பதிலளித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவும் வழக்கம் போல் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்படுவதால் சில சமூக விரோதிகள் தெருக்களில் மது அருந்திவிட்டு அட்டகாசம் செய்வதாகவும், மின்வெட்டால் இருட்டாக இருப்பதால் அவர்களை அடையாளம் கண்டு புகார் அளிக்க முடியாத சூழல் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.