தற்போதைய செய்திகள்

ராசிபுரத்தில் 30 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகை – அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா வழங்கினார்

நாமக்கல்

ராசிபுரத்தில் 30 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகையை அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா வழங்கினார்.

ராசிபுரம் பகுதியில் சமூக நலத்துறை சார்பில் முதியோர் உதவி தொகை வழங்கும் விழா ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 30 பயனாளிகளுக்கு முதியோர் உதவி தொகைகளை கழக மகளிர் அணி இணைச் செயலாளரும், சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சருமான டாக்டர் வெ.சரோஜா வழங்கினார். மேலும் நிலவரி கணக்கெடுப்பு திட்டத்தின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்ட வீடுகளுக்கான பட்டாக்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 13 பயனாளிகளுக்கு பட்டா வழங்கி இதற்கான திட்டத்தையும் அமைச்சர் துவக்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா தெரிவிக்கையில், முதியோர் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு அதிக சலுகைகளை வழங்கி இந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சமூக நலத்திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறார். மேலும் தற்போதைய சூழ்நிலையில் பொதுமக்கள் கொரோனாவில் தங்களை காத்துக்கொள்ள விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். சமூக இடைவெளி, முககவசம் அணிவது அவசியம் என்றார்.

இவ்விழாவில் ராசிபுரம் நகர கழக செயலாளரும், நகர கூட்டுறவு வங்கி தலைவருமான எம்.பாலசுப்ரமணியம், ராசிபுரம் வட்டாட்சியர் கே.பாஸ்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.