தற்போதைய செய்திகள்

அநீதி விளைவிப்பது தான் திராவிட மாடல் ஆட்சியா? முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி

சென்னை

அநீதி விளைவிப்பது தான் திராவிட மாடல் ஆட்சியா? என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை ராயபுரத்தில் கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கேள்வி:- அரசு ஊழியர் ஒரு சாதி பெயரால் அவமதிக்கப்பட்டார் என்று குற்றச்சாட்டு வந்தவுடன் அமைச்சர் இலாகா மாற்றப்படுகிறது.

பதில்:- இதுதான் திராவிட மாடல் ஆட்சி. திராவிட மாடல் என்பது ஒடுக்கப்பட்ட மக்களான இருக்கின்ற ஆதிதிராவிடர்கள், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அநீதி விளைவிப்பதுதான் அவர்களுடைய திராவிட மாடல். அன்று ஆர்.எஸ்.பாரதி என்ன சொன்னார். புரட்சித்தலைவி அம்மாவுக்கு நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்குகிறது.

அதனை விமர்சனம் செய்யலாமா? தங்கராஜ் ஆதிதிராவிடர் சமூதாயத்தை சேர்ந்தவர். எப்படி போஸ்டர் அடித்தார்கள். வழங்கப்பட்ட நீதியா? வாங்கப்பட்ட நீதியா? என்று போஸ்டர் அடித்தார்களா, இல்லையா? ஆதிதிராவிட நீதிபதிகள் எல்லாம் நாங்கள் போட்ட பிச்சை என்றார் ஆர்.எஸ்.பாரதி.

அதன் உச்சக்கட்டமாக ஒரு வட்டார வளர்ச்சி அலுவலர் ஒடுக்கப்பட்ட ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் அவரை ஜாதி பேரை சொல்லி திட்டி இழிவு படுத்தியுள்ளார்கள். அவரே வந்து பேட்டி அளித்துள்ளார் என்பது எந்த அளவுக்கு இந்த விடியா அரசு ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்கிறது அரசு என்பது தெரிகிறது.

பெயருக்கு வெளியே திராவிட மாடல். தி.மு.க. வரலாற்றில் கொடி பிடித்து வா என்றால் தடி எடுத்து வா என்று அர்த்தம். சமூக நீதி என்பது ஒடுக்கபட்ட மக்களை ஒடுக்குவது. இதுதான் திராவிட மாடல். வெளிப்படையாக, தைரியமாக ஒரு வட்டார வளர்ச்சி அலுவலர் குற்றம் சாட்டுகிறார் என்றால் சம்பந்தப்பட்ட அமைச்சரை நீக்க வேண்டுமா, இல்லையா? அதற்கு பதில் அவருக்கு பரிசு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்.

இது அவருக்கு வழங்கப்பட்ட பரிசாக தான் பொதுமக்கள் பார்க்கிறார்களே தவிர இது தண்டணையாக யாரும் பார்க்கவில்லை. தேசிய ஆதிதிராவிட நலத்துறை ஆணையம், மாநில ஆதிதிராவிடர் நல ஆணையம் தாமாக முன்வந்து சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் பொதுமக்களின் வேண்டுகோள்.

கேள்வி:- முதல்வரின் துபாய் பயணத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்:- கண்காட்சி 4 நாட்களில் முடியும் தருவாயில் கலந்து கொண்ட ஒரே முதல்வர் நமது அருமை முதல்வர்தான். ஒரு குடும்ப சுற்றுலா சென்றுள்ளார்கள். பத்திரிகைகளும் இதனைதான் தெரிவிக்கின்றன.

பொதுமக்களும் இப்படி தான் தெரிவிக்கிறார்கள். முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளிநாடு செல்லும்போது அரசு அதிகாரிகள் உடன் சென்றார்கள். ரூ.9 ஆயிரம் கோடி முதலீடுகளை
கொண்டு வந்தார்கள். இவர்கள் ரூ.6 ஆயிரம் கோடி ஈர்த்து வந்ததாக சொல்கிறார்கள். இது எதற்கு? மாலு, மாலு. என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

எதற்கு போனார்கள். எதற்காக போனார்கள் என்பது வெட்டவெளிச்சமாக வர போகிறது. இது குறித்து மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த மக்களின் வேண்டுகோள்.

வெளிநாடு சென்ற குழுவில் குடும்ப ஆடிட்டர் ஏன் சென்றார். குடும்ப தணிக்கையாளர் போக வேண்டிய ரகசியம் என்ன. இது குறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நிச்சயமாக நம்புகிறேன்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.