தற்போதைய செய்திகள்

மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களின் கோரிக்கைகளை முதல்வர், துணைமுதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை – தேனியில் எஸ்.டி.கே.ஜக்கையன் எம்.எல்.ஏ உறுதி

தேனி

மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களின் கோரிக்கைகளை முதல்வர், துணை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேனியில் எஸ்.டி.கே.ஜக்கையன் எம்.எல்.ஏ பேசினார்.

தேனி மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பிரிதா நடேஷ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ராஜபாண்டியன், மாவட்ட ஊராட்சி செயலாளர் பரமசிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பிரிதா நடேஷ் திருக்குறள் வாசித்து கூட்டத்தை துவக்கி வைத்தார்.

பொது நிதியிலிருந்து 7-வது வார்டில் 26 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான வளர்ச்சி பணிகள் மற்றும் 4-வது வார்டில் ரூ.15 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் உள்ளிட்டவைகளுக்கு பரிந்துரை உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட ஊராட்சி குழு சார்பில் துணைத்தலைவர் ராஜபாண்டியன் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் மத்திய, மாநில அரசுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து உறுப்பினர் வசந்தாநாகராஜ் இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதற்காக கம்பம் சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றி தெரிவித்தார். மேலும் உறுப்பினர் ஜி.கே.பாண்டியன், தமயந்தி ஆகியோர் எங்களை தேர்ந்தெடுத்த பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் தனி அறை ஒதுக்க வேண்டும் என்றும், அரசு விழாக்களில் நிர்வாகம் சார்பில் உரிய அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன் பேசும் போது உறுப்பினர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டு முதல்வர், துணை முதல்வர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என்றார். மேலும் மாவட்ட ஆட்சியரிடமும் எடுத்துரைக்கிறேன் என்றும் தெரிவித்தார். கோரிக்கைகளை நிறைவேற்ற உதவி புரியும் கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தனர். முடிவில் துணைத்தலைவர் ராஜபாண்டியன் நன்றி கூறினார்.