சிறப்பு செய்திகள் தற்போதைய செய்திகள்

கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து துறையினருக்கும் முதலமைச்சர் நன்றி

சென்னை

கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து துறையினருக்கும், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில், கொரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுப்புப் பணிகள் குறித்து, காணொலி காட்சி மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் ஆற்றிய முடிவுரை வருமாறு:-

இன்றைய தினம் மாவட்ட ஆட்சித்தலைவர்களின் 8-வது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றிருக்கின்றது. எட்டு முறை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்கள், தங்கள் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்ப்பரவலைத் தடுப்பது குறித்தும், அதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், அந்தந்த மாவட்டங்களில் நடைபெற்றிருக்கின்ற பணிகள் குறித்தும் விளக்கமாக தெரிவித்திருக்கின்றார்கள்.

அதோடு, தலைமைச் செயலாளர் தலைமையில், 12 முறை மாவட்ட ஆட்சியாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றிருக்கின்றன. அந்த ஆலோசனைக் கூட்டங்களில், மாவட்ட ஆட்சித்தலைவர்கள் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற விவரத்தை ஆலோசித்து அவர் தெரிவித்திருக்கின்றார்.

அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் அரசின் ஆலோசனையை ஏற்று சிறப்பாக பணியாற்றிய காரணத்தால், இன்றைக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் தமிழகத்தில் தடுக்கப்பட்டு, கட்டுப்பாட்டிற்குள் இருக்கின்றது. இறப்பு சதவீதம் குறைக்கப்பட்டிருக்கின்றது. அதற்கு அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த செயலாளர்களுக்கும் மற்றும் மாவட்ட ஆட்சியரோடு இணைந்து பணியாற்றிய அனைத்து அலுவலர்களுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கின்ற மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் கொரோனா வைரஸ் நோய் பரவலைத் தடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை, காவல் துறை மற்றும் உணவு மற்றும் கூட்டுறவுத்துறையை சேர்ந்த பணியாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த பணியாளர்கள் அனைவருக்கும் அரசின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.