சிறப்பு செய்திகள் தற்போதைய செய்திகள்

பொதுமக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு நல்க வேண்டும் – முதலமைச்சர் வேண்டுகோள்

சென்னை

அரசின் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர்களுடனான கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுத் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் ஆற்றிய தொடக்க உரை வருமாறு:-

நேற்றையதினம் சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, தமிழகத்தில் இதுவரை பரிசோதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,75,866, அதில் தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 2,27,688, இது 9 விழுக்காடு. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 96,438. தற்போது சிகிச்சையிலுள்ளவர்களின் எண்ணிக்கை 57,073.

சென்னை மாநகராட்சியில் சிகிச்சையிலுள்ளவர்களின் எண்ணிக்கை 12,852. இதுவரை, தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 1,66,956. சென்னையில் குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 81,530. தமிழகத்தில், ஒட்டுமொத்தமாக குணமடைந்தவர்கள் 73 விழுக்காடு.

சென்னை மாநகரத்தைப் பொறுத்தவரை 84.5 விழுக்காடு. கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 3,659. சென்னையில் 2,056. நோய்த் தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கையின் சதவிகிதம் ஒட்டுமொத்தமாக 1.6, சென்னையில் 2.1.

நேற்றையதினம் பரிசோதிக்கப்பட்டுள்ள மாதிரிகளின் எண்ணிக்கை 61,153. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,972. பாதிக்கப்பட்டவர்கள் 11 விழுக்காடு. புரட்சித்தலைவி அம்மாவினுடைய அரசு நோய்ப் பரவலைத் தடுக்க தொடர்ந்து கடும் முயற்சி செய்து வருகிறது. ஆகவே, பொதுமக்களின் நலன் கருதி அரசு எடுத்து வரும் கோவிட்-19 தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொதுமக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உரையாற்றினார்.