தமிழகம்

கொரோனா சிகிச்சை அளிக்கஅனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் படுக்கை வசதிகள் – முதலமைச்சர் தகவல்

சென்னை

கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் படுக்கை வசதிகள் உள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று தலைமைச்செயலகத்தில், கொரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுப்பு பணிகள் குறித்து, காணொலிக்காட்சி மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர்களுடனான ஆய்வுக்கூட்டத்தில் ஆற்றிய முடிவுரை வருமாறு:-

சென்னை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் நோய் பரவல் அதிகரித்து கொண்டேயிருந்தது. அதை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில், குடிசை மாற்று வாரிய வீடுகளில் வசிக்கின்ற மக்களுக்கும், குடிசையில் வசிக்கின்ற ஏழை, எளிய மக்களுக்கும் விலையில்லாமல் முகக்கவசம் வழங்கப்பட்டது. மேலும், சுமார் நாள்தோறும் 500 முதல் 600 வரை காய்ச்சல் முகாம்களும் நடத்தப்பட்டன.

சென்னை மாநகராட்சியில் மட்டும் ஏறக்குறைய 25,532 காய்ச்சல் முகாம்கள் நடைபெற்று முடிந்திருக்கின்றன. அந்த முகாம்களில் சுமார் 14,50,000 நபர்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு, நோய்த்தொற்று ஏற்பட்டவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டதன் விளைவாக, படிப்படியாக சென்னை மாநகரத்தில் கொரோனா நோய்த்தொற்று குறைந்து கொண்டிருக்கிறது.

மேலும், சென்னை மாநகரத்தில் வீடு,வீடாக சென்று காய்ச்சல், இருமல், தொண்டை வலி, சளி போன்ற அறிகுறிகள் தென்பட்டவர்களை கண்டறிந்து, பரிசோதனைக்குட்படுத்திய பிறகு, உடனடியாக அவர்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் கொரோனா வைரஸ் பரவல் தடுக்கப்படுகின்றது.

சென்னையில் மட்டும் ஏறக்குறைய 20,000 பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றார்கள். அதேபோல, பிற மாவட்டங்களிலும் காய்ச்சல் முகாம்கள் நடைபெற்றதன் காரணத்தினால், அதில் ஆயிரக்கணக்கானோர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்ற காரணத்தினால் கொரோனா வைரஸ் நோய்ப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகரத்தில் மட்டும் அரசால் நியமிக்கப்பட்ட அலுவலர்கள் பலமுறை ஒருவீட்டிற்கு சென்று அவர்களை விசாரித்து, நோய் அறிகுறி தென்பட்டவர்களை பரிசோதனைக்குட்படுத்திய காரணத்தால், சென்னை மாநகரத்தில் படிப்படியாக கொரோனா வைரஸ் நோய்ப்பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கிறோம்.

அதேபோல, சென்னை மற்றும் அனைத்து மாவட்டங்களிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான படுக்கை வசதிகள் தயார் நிலையில் இருக்கின்றன. நடமாடும் மருத்துவமனைகள், சென்னையில் 70, மற்ற மாவட்டங்களில் 1,126 என மொத்தம் 1,196 ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

இதன் விளைவாக, நோய்த்தொற்று அறிகுறி அதிகமாகவுள்ள பகுதிகளுக்கு நடமாடும் மருத்துவமனை சென்று, அந்தப்பகுதியில் இருக்கின்ற மக்களைப்பரிசோதனை செய்து, நோய் அறிகுறி தென்பட்டால் சிகிச்சை அளித்து, நோய்ப்பரவல் தடுக்கப்படுகிறது.

தொழிற்சாலைகள் முழுமையாக இயங்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்று, சென்னையில் 50 சதவிகிதப் பணியாளர்களுடனும், சென்னை தவிர, பிற மாவட்டங்களில் 100 சதவிகித பணியாளர்களுடனும் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டு, தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

கொரோனா வைரஸ் நோய்ப்பரவல் காரணமாக தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிச் சென்ற வெளிமாநில தொழிலாளர்கள் மீண்டும் தமிழ்நாட்டில் பணிபுரிய விருப்பப்படுவதாக தொழில் நிறுவனத்தினர் தெரிவித்ததாக அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களும் தெரிவித்ததை தொடர்ந்து, அவர்களுக்கு அனுமதி வழங்கலாம் என்ற உத்தரவும் அரசால் வழங்கப்பட்டு, வெளிமாநில தொழிலாளர்களை பரிசோதனை செய்து, அரசின் வழிகாட்டுதல்களின்படி பணியில் அமர்த்திக் கொள்ளலாம் என்ற அனுமதியும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.