சிறப்பு செய்திகள்

கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழகம் கடுமையான முயற்சிகளை எடுத்து வருகிறது – முதலமைச்சர் பேச்சு

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமை செயலகத்தில், கொரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுப்புப்பணிகள் குறித்து, காணொலிக்காட்சி மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர்களுடனான ஆய்வுக்கூட்டத்தில் ஆற்றிய முடிவுரை வருமாறு:-

கொரோனா வைரஸ், உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கிற இந்த தருணத்தில், இந்தியாவிலேயே தமிழகத்தில் சிறப்பான முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டிருக்கிறது. மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்றைய தினம் வரை 2,27,688. குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 1,66,956. தற்போது சிகிச்சையிலுள்ளவர்களின் எண்ணிக்கை 57,073. இறந்தவர்களின் எண்ணிக்கை 3,659. அம்மாவின் அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக இறப்பு சதவிகிதம் குறைக்கப்பட்டிருக்கின்றது.

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. நாளொன்றுக்கு சுமார் 63 ஆயிரம் நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு, அதிகமான பரிசோதனை செய்யப்படுவதில், இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. அதேபோல, தமிழகத்தில் 119 பரிசோதனை நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இதுவரை 24,75,866 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரசை பொறுத்தவரை மக்களின் எண்ணங்களை தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.

தற்போது பருவமழை தொடங்கியுள்ளதால், பொழிகின்ற மழைநீர் முழுவதையும் சேமித்து வைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்பட்டு அவர்கள் இப்பொழுது சிகிச்சையில் இருந்து கொண்டிருக்கின்றனர்.

அதேபோல, உள்ளாட்சித்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, உணவுத்துறை, கூட்டுறவுத்துறை மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த பணியாளர்கள் இந்த கொரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுப்புப்பணியில் ஈடுபட்டிருந்தபொழுது, நோய்த்தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அனைவரும் விரைவில் பூரண குணமடைய வேண்டும், நலம் பெற வேண்டுமென்று இறைவனை நான் பிரார்த்திக்கின்றேன்.

அதேபோல, மக்களும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். மக்கள் எந்த அளவுக்கு ஒத்துழைப்பு தருகின்றார்களோ, அந்த அளவுக்குத்தான் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியும். நான் ஏற்கனவே பலமுறை குறிப்பிட்டதை போல, பொதுமக்கள் வெளியில் செல்லும் போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.

மார்க்கெட், மளிகைக்கடை, வங்கிகள் போன்ற இடங்களுக்குச் சென்றாலும், சமூகஇடைவெளியை பின்பற்ற வேண்டும். வெளியில் சென்று வீடு திரும்பும்பொழுது, கை, கால்களை கண்டிப்பாக சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். வீட்டையும், கழிப்பறைகளையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இவற்றையெல்லாம் கடைபிடித்தாலே கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலைத்தடுத்து, நாம் இயல்பு நிலைக்குத்திரும்ப முடியும்.

எனவே, பொதுமக்கள் அனைவரும் அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமென்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இந்நோய்ப் பரவலைத் தடுப்பதற்கு, இந்தியாவிலேயே, தமிழகம் கடுமையான முயற்சிகளை எடுத்து வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

உலக சுகாதார அமைப்பு, மத்திய சுகாதாரத்துறை, ஐ.சி.எம்.ஆர்., தமிழக மருத்துவ நிபுணர்கள் அளிக்கின்ற அறிக்கை மற்றும் ஆலோசனைகளின்படி அம்மா அரசால் அனைத்து வழிகளிலும் நோய்ப் பரவலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நான் மீண்டும், மீண்டும் பொதுமக்களை கேட்டுக் கொள்வதெல்லாம் அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமென்று அருள்கூர்ந்து கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் பேசினார்,