தற்போதைய செய்திகள்

பெருங்காமநல்லூர் தியாகிகளுக்கு கழகம் சார்பில் வீரவணக்கம்

நினைவிடத்தில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ- ஆர்.பி.உதயகுமார் மரியாதை

மதுரை

பெருங்காமநல்லூர் தியாகிகள் நினைவிடத்தில் நேற்று கழகம் சார்பில் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

மதுரை மாவட்டம் பெருங்காமநல்லூரில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் கழகம் சார்பில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ., ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர்.

இதன் பின்னர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தென்னிந்திய ஜாலியன் வாலாபாக் என்றழைக்கப்படும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதி பெருங்காமநல்லுாரில் கைரேகை சட்டத்தை எதிர்த்து தன்மானத்துடன் போராடிய மாயக்காள் உட்பட 16 பேர் மீது பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசு துப்பாக்கிச்சூடு நடத்தியது. இன உரிமைக்காக போராடிய வீர தியாகிகளின் நினைவை போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 3-ந்தேதி மரியாதை செய்யப்பட்டு வருகிறது.

நுாற்றாண்டு நினைவு நாளையொட்டி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அம்மாவின் அரசில் வீரத்தியாகிகளின் நினைவை போற்றும் வகையில் ஐந்தரை ஏக்கரில் மணி மண்டபம் அமைத்திட ரூ.1.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டு பெருமை சேர்த்தது.

சுதந்திர போராட்ட தியாகி தென்மாவட்ட மக்களின் கல்வி வளர்ச்சிகாக பாடுபட்ட பி.கே.மூக்கையா தேவரின் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு உசிலம்பட்டியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், நத்தம் இரா.விஸ்வநாதன், செல்லுார் கே.ராஜூ, மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத், உசிலம்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.அய்யப்பன், மாவட்ட கழக செயலாளர்கள் பி.ஆர்.செந்தில்நாதன், எம்.ஏ.முனியசாமி, ரவிச்சந்திரன், எஸ்.பி.எம்.சையதுகான் மற்றும் முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.