தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும்-எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவி உறுதி

ராணிப்பேட்டை

தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டதால் தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்று எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவி கூறினார்.

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி கிழக்கு ஒன்றியம் மாம்பாக்கம் கூட்ரோடு பகுதியில் ஒன்றிய கழக செயலாளர் சொறையூர் எம். குமார் ஏற்பாட்டில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளரும், எதிர்க்கட்சி துணை கொறடாவுமான சு.ரவி எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பேசியதாவது:-


ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி மக்கள் பணியாற்றும் ஒரே இயக்கம் கழகம் மட்டும் தான். ஸ்டாலின்
தேர்தல் நேரத்தில் அறிவித்த 525 வாக்குறுதிகளில் ஒன்றை கூட நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். குடும்ப தலைவிக்கு மாதந்தோறும் ரூ.1000, கல்விக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் ரத்து, நீட் தேர்வு ரத்து
உள்ளிட்ட முக்கியமான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற இல்லை. கழகம் என்ற பேரியக்கம் மாவட்டம் முழுவதும் ஏழை, எளிய மக்களின் தாகத்தை தீர்க்க நீர். மோர் பந்தலை திறந்து வருகிறது. ஆனால் ஆளும் தி.மு.க.வினருக்கு நேரமில்லை.
மாவட்டம் முழுவதும் எங்கும் நீர், மோர் பந்தலை திறக்கவில்லை.

தி.மு.க.வினருக்கு கூட்டுறவு கடை, டாஸ்மாக் கடை, பி.டி.ஓ. அலுவலகத்தில் கலெக்சன் செய்யவே நேரம் இல்லை.
தி.மு.க. அரசு என்றாலே கலெக்சன், கமிஷன், கரப்சன் தான். 100 நாள் வேலை 150 நாட்களாக உயர்த்தப்படும் என சொன்னார்கள். ஆனால் அதையும் செய்யவில்லை.

ஆட்சிக்கு வந்ததும் முதல் சட்டமன்ற கூட்டத்திலேயே நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் மகன் உதயநிதி தேர்தல் பிரச்சாரத்தின்போது சொன்னார். ஆனால் இன்றுவரை நீட் தேர்வை ரத்து செய்யவில்லை. தொண்டர்கள் இயக்கம் கழகம். குடும்பத்தின் இயக்கம் தி.மு.க..

உழைக்கின்ற சாதாரண தொண்டனும் கழகம் என்ற பேரியக்கத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், எம்.எல்.ஏ., எம்.பி., நகரமன்ற தலைவர் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு வர முடியும். ஆனால் தி.மு.க.வில் கருணாநிதி குடும்பம் மட்டுமே உயர் பதவிகளுக்கு வர முடியும். கழகம் தொடங்கி 50 ஆண்டு காலம் ஆகிறது.

இன்று வரை இந்த இயக்கம் 5 முதலமைச்சர்களை கண்டுள்ளது. 63 ஆண்டு காலம் ஆகிறது தி.மு.க.வில் கருணாநிதியும், அவரது மகன் மு.க.ஸ்டாலின் ஆகிய இருவர் மட்டுமே முதலமைச்சராகியுள்ளனர். தி.மு.க. அரசை வீட்டிற்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டனர். விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும்.

ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தால் மூன்று வருடம் அல்லது நான்கு வருடத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்புவார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்து 6 மாதத்திலேயே ஆட்சி மாற்றம் வரவேண்டும் என தமிழக மக்கள் விரும்புகின்றனர்.

தி.மு.க.வினர் ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஜனநாயக ரீதியில் வெற்றி பெறவில்லை. கொல்லைப்புற வழியில் வெற்றி பெற்றனர். தி.மு.க.வுக்கு ஏன் ஓட்டு போட்டோம் என மக்கள் சிந்திக்க தொடங்கி விட்டனர்.

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளிநாடுகளுக்கு தன்னந்தனியாக அதிகாரிகளுடன் சாதாரண விமானத்தில் சென்றார். ஆனால் ஸ்டாலின் குடும்பத்துடன் மனைவி, மகன், பேரன், மருமகள், மருமகன், உள்ளிட்ட 18 பேருடன் ரூ.2 கோடி செலவில் தனி விமானத்தில் சென்றுள்ளார். சொந்த பயணமாக ரூ.5000 கோடி முதலீடு செய்ய தனது ஆடிட்டருடன் ஸ்டாலின் துபாய் சென்று வந்தார் என மக்கள் பேசி கொள்கின்றனர். ஒரே தேசம், ஒரே தேர்தல் விரைவில் வர இருக்கிறது. அப்போது அம்மாவின் ஆட்சி தமிழகத்தில் மலர்வது உறுதி

இவ்வாறு மாவட்ட கழக செயலாளரும், எதிர்கட்சி துணை கொறடாவுமான சு.ரவி எம்.எல்.ஏ. பேசினார்.