சிறப்பு செய்திகள்

மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதலமைச்சர்

சென்னை

அருந்தியினர் காலனியில் நடந்த பொங்கல் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று  14 ந்தேதி சேலம் மாவட்டம், எடப்பாடி ஊராட்சி ஒன்றியம், வெள்ளரிவெள்ளி ஊராட்சி, சப்பாணிப்பட்டி அருந்ததியர் காலனியில் நடைபெற்ற தைப்பொங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

சப்பாணிப்பட்டி கிராமத்திற்கு வந்த முதலமைச்சரை ஆண்களும், பெண்களும் திரண்டு உற்சாக வரவேற்பினை அளித்தார்கள். அந்த வரவேற்பினை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு அந்த ஊரில் உள்ள விநாயகர் கோவில் மற்றும் மாரியம்மன் கோவிலில் அப்பகுதி மக்களோடு மக்களாக சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் ஊர் மக்கள் அனைவரும் தைப்பொங்கலையொட்டி பொங்கல் வைத்து வழிப்பட்டனர். அந்த நிகழ்ச்சியிலும் முதலமைச்சர் கலந்து அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் செல்பி எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டத்திற்கிணங்க முதலமைச்சர் செல்பி எடுத்துக்கொண்டார்.

அதன் பின்னர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் அருந்ததியர் சமுதாயப் பெருமக்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்தியதோடு, அவர்களின் குழந்தைகளுக்கு சர்க்கரை பொங்கல் மற்றும் உணவு வழங்கினார்.

முதலமைச்சர் அந்தப்பகுதிக்கு வருகைதந்தது பற்றி அப்பகுதி பெண்களிடம் கேட்டபோது எங்கள் பகுதிக்கு முதலமைச்சர் வருகை தந்து பொங்கல் விழாவிலும் கலந்துக்கொண்டு எங்களோடு அமர்ந்து உணவு அருந்தியது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியமாக கருதுகின்றோம் என மகிழ்ச்சிபொங்க தெரிவித்ததோடு, இது எங்களுக்கு மகிழ்ச்சியையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது என்று கூறினார்கள்.