தற்போதைய செய்திகள்

பழுதடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் மனு

கன்னியாகுமரி

பழுதடைந்த சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் மனு அளித்தார்.

முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சித்தலைவரை ேநரில் சந்தித்து அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

ேகசவன்புத்தன்துறை ஊராட்சி- புத்தன்துறை மீனவ கிராம மக்கள் தங்கள் பகுதியில் தேங்குகிற தண்ணீரை கடலில் சென்று கலக்கும் விதமாக தோண்டப்பட்ட ஓடையில் சுமார் 390 மீட்டர் பக்க சுவர் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ராஜாக்கமங்கலம் ஒன்றிய பொது நிதியிலிருந்து கான்கிரீட் மேல் தளம் 100 மீட்டர் போடப்பட்டுள்ளது. மேற்கண்ட மழைநீர் ஓடையில் 400 மீட்டர் மேல் தளம் அமைத்து தர வேண்டும்.

தேவாளை ஒன்றியம் தெள்ளாந்தி ஊராட்சியில் உடையடி கிராமத்திலிருந்து தென்பாறை கிராமத்திற்கு செல்லும் தெள்ளாந்தி குளத்தின் கரை தெற்கு பக்க சாலை பல ஆண்டுகளாக சரி செய்யப்படாமல் தற்போது குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இப்பகுதியில் விவசாயம் செய்யப்படும் நெல், வாழை, காய்கறிகளை விவசாயிகள் கொண்டு செல்ல மிகவும் அவதிப்படுகிறார்கள்.

மேலும் மிகவும் பிரசித்தி பெற்ற தென்பாறை தியாக விடங்கர் சிவன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களும் மிகவும் சிரமப்படுகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு உடையடி முதல் தென்பாறை வரை உள்ள பழுதடைந்த சாலைகளை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.