தற்போதைய செய்திகள்

இரட்டை குதிரையில் தி.மு.க. சவாரி – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தாக்கு

சென்னை

இரட்டை குதிரையில் தி.மு.க. சவாரி செய்வதாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான
டி.ஜெயக்குமார் நேற்று சென்னை ராயபுரம் பகுதியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த விடியாத அரசை பொறுத்தவரையில் உண்மையில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று, அவர் கழகத்தை அழித்து விடலாம், ஒழித்து விடலாம், சிறையில் போட்டால் அடங்கி விடுவார்கள். இனிமேல் பேசமாட்டார்கள் என்று நினைத்தார். அவருக்கு வரலாறு தெரியவில்லை. 1972-லிருந்து அடக்குமுறையை சந்தித்த கட்சி தான் கழகம்.

அவருடைய அப்பா காலத்தில் புரட்சித்தலைவர் மீது அடக்குமுறை ஏவி விடப்பட்டு அதனை எல்லாம் சமாளித்து மாபெரும் இயக்கமாக உருவெடுத்தது. அதுபோல அம்மா காலத்திலேயும் ஏகப்பட்ட வழக்குகள் எல்லாம் போட்டு, பெரிய அளவுக்கு கட்சி எழுச்சியாகி ஆட்சியை பிடித்தது.

எனவே அடக்குமுறை என்பது ஒரு தீர்வல்ல. ஜனநாயகத்தில் அடக்குமுறையை ஒரு ஆட்சி கையாண்டால் அது வீழ்ச்சியை நோக்கிதான் பயணம் செய்யும். அதற்கு கடந்த காலங்களிலே உதாரணங்கள் எல்லாம் உள்ளது.

திருச்சியில் கழகம் பெரிய எழுச்சியாக இருக்கிறது. நான் சென்ற பிறகு மிகப்பெரிய எழுச்சியாக ஆகி விட்டது. என்னால்
என்றும் மறக்க முடியாது.

திருச்சி ஒரு திருப்புமுனையாக இருந்தது. சென்னையிலும் கட்சியின் எழுச்சியை அவர்கள் காண்பிக்கிறார்கள். எனவே இந்த பள்ளிக்கு வரும் நிகழ்வு என்பது தினந்தோறும் கட்சிக்கு எழுச்சி உண்டாக்குவதற்கு ஸ்டாலினும் ஒரு காரணம்.

கேள்வி:- திருவெற்றியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.சாமி மாமூல் கேட்கிறார் என்று புகார் அளிக்கப்பட்டுள்ளதே.

பதில்:- இதுபோன்ற சம்பவங்களை தி.மு.க. தலைவர் ஸ்டாலினால் கட்டுப்படுத்த முடியாது என்று ஏற்கனவே நான் குறிப்பிட்டேன். அவர் விளம்பர அரசியல் செய்துவிட்டு ஒரு மாயையை ஏற்படுத்தலாம். டெல்லி சென்றார். மாதிரி பள்ளியை பார்வையிடுகிறார். நமது காலத்தில் மாணவர்கள் அறிவுப்பூர்வமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு மகத்தான திட்டத்தை அம்மா கொண்டு வந்தார்.

மடிகணினி அளிக்கும் திட்டம். அந்த திட்டத்தை நிறுத்தி விட்டார். நாங்கள் 14 லட்சம் பேருக்கு தாலிக்கு தங்கம் திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம். 7 டன் தங்கம் வாங்கப்பட்டது. அதனை அளித்தது அம்மாவின் அரசு. பணமாக கிட்டத்தட்ட 7 ஆயிரம் கோடி ரூபாய். இப்படி ஒரு மகத்தான திட்டத்தை மூடுவிழா செய்துவிட்டு, தமிழகத்தில் தேனும், பாலும் ஓடும் என்றால் எப்படி.

ஒரு தேனும், பாலும் இங்கு ஓடவில்லை. டெல்லிக்கு சென்று காவடி எடுத்துள்ளார். மத்திய அமைச்சர் அமித்ஷா வரும் போது அமைச்சர்கள் எப்படி எல்லாம் வணக்கம் செய்தார்கள் என்பதை நீங்கள் சமூக ஊடகத்தில் பார்த்திருப்பீர்கள். அவர் வருகிறார். இவர்கள் வலிய சென்று வணக்கம் போடுகிறார்கள்.

இதுபோல கொத்தடிமைகளாக ஆகிவிட்டு, எப்படியாவது பா.ஜ.க.வோடு ஒட்டிக்கொள்ளலாம் என்று தி.மு.க செல்கிறது. இது காங்கிரஸ் கட்சிக்கு தெரிந்து விட்டது. தடுக்கி விழுத்தால் தி.மு.க. விழாவுக்கு சென்னைக்கு வரும் ராகுல்காந்தி ஏன் டெல்லியில் நடைபெற்ற தி.மு.க. அலுவலக திறப்பு விழாவிற்கு ஏன் செல்லவில்லை. அவர்கள் உணர்ந்து விட்டார்கள். இவர்கள் இரட்டை குதிரையில் சவாரி செய்கிறார்கள் என்று உணர்ந்துவிட்டார்கள்.

காங்கிரஸ் கட்சியை கழட்டி விட்டு, பா.ஜ.க.வுக்கு கொத்தடிமை பணியை செய்ய இவர்கள் தயாராகி விட்டார்கள் என்று அவர்கள் தி.மு.க.வுக்கு செக் வைத்துள்ளார்கள். தி.மு.க. இரட்டை சவாரி செய்கிறது. பச்சோந்தி நிறத்தை மாற்றிக்கொள்ளும். இது பச்சோந்திக்கு கைவந்த கலை. இந்த கலையை தான் தி.மு.க கடைபிடிக்கிறது.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.