சிறப்பு செய்திகள்

சென்னையில் நோய்ப்பரவல் குறைய தொடங்கியிருக்கிறது – முதலமைச்சர் தகவல்

சென்னை

நாள்தோறும் 600 மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது என்றும் சிறப்பான சிகிச்சையால் சென்னையில் நோய்ப்பரவல் குறையத் தொடங்கியிருக்கிறது என்றும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மருத்துவ நிபுணர்கள் குழுவினருடனான கலந்தாய்வு கூட்டத்தில் பேசியதாவது:-

உலகையே அச்சுறுத்தி உலுக்கிக்கொண்டிருக்கின்ற கொரோனா வைரஸ் நோய்ப்பரவலை தடுப்பதற்கு அம்மாவின் அரசு பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னையில், அதிகளவு இருந்த கொரோனா வைரஸ் நோய்ப் பரவல் மருத்துவ நிபுணர்கள் குழு அளித்த ஆலோசனைகளை ஏற்று, அம்மாவின் அரசு எடுத்த சரியான நடவடிக்கைகளின் காரணமாக, படிப்படியாக இந்த நோய்த்தொற்று குறைந்து கொண்டிருக்கின்ற நிலையை பார்க்கின்றோம். சென்னை, மக்கள் அதிகம் வாழுகின்ற ஒரு மாநகரம். மேலும், இங்குள்ள குறுகலான வீதிகளில் நெருக்கமான வீடுகள் இருக்கின்றன.

சென்னை மாநகரத்தில் அதிக நபர்கள் வசிக்கின்ற காரணத்தினால், ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு இந்த நோய்த் தொற்று எளிதாக பரவி விடுகிறது. ஆகவே, கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, அதன் மூலமாக இந்த நோய்த் தொற்று குறைக்கப்பட்டிருக்கின்றது. சென்னை மாநகரத்தில் சுமார் 25,532 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. நாள்தோறும் 500 முதல் 600 வரையிலான முகாம்களில் பரிசோதனை செய்யப்பட்டு, நோய் அறிகுறி தென்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல 20,000 பணியாளர்களை வைத்து சென்னை மாநகரத்தில் வீடு, வீடாகச் சென்று, ஒரு வீட்டிற்கு 10 முதல் 12 முறை சென்று, மக்களுக்கு காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி போன்றவை இருக்கின்றதா என்பதைக் கேட்டறிந்து, அப்படி அறிகுறி தென்படும் பட்சத்தில், அவர்களை பரிசோதனைக்குட்படுத்தி, மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்படுகின்றது. அதனால், நோய்ப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல காய்ச்சல் முகாம் நடத்தியதன் விளைவாக, சென்னை மாநகரத்தில் மட்டும் 14.5 லட்சம் நபர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றார்கள்.

இதுபோன்ற நடவடிக்கைகளின் காரணமாகத்தான் சென்னை மாநகரத்தில் நோய்ப் பரவல் குறையத் தொடங்கியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும் 1,196 நடமாடும் மருத்துவமனைகள் மூலமாக கொரோனா வைரஸ் தொற்று இருக்கும் இடங்களில் உள்ளவர்களை பரிசோதனை செய்து, நோய் அறிகுறி தென்பட்டால் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்ததன் விளைவாக இந்த நோய்ப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை வெளியே வராமல் பாதுகாப்பாக வைத்திருக்கின்றோம். அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் அவர்கள் வசிக்கின்ற இடத்திற்கே சென்று விநியோகிக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய அளவிற்கு மருத்துவமனைகளில் தேவையான படுக்கை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

சென்னை மாநகரத்தில் குடிசை பகுதியில் வாழ்கின்ற மக்களுக்கு சென்னை மாநகராட்சி மூலமாக முகக்கவசம் வழங்கப்பட்டிருக்கின்றது. அதுமட்டுமல்லாமல், அனைவருக்கும் முகக்கவசம் வழங்க வேண்டுமென்று அரசு முடிவெடுத்து, திட்டத்தையும் நாங்கள் துவக்கி வைத்திருக்கின்றோம். முதற்கட்டமாக, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியில் வசிக்கின்ற மக்களுக்கு நியாயவிலைக்கடை மூலமாக நபர் ஒருவருக்கு 2 முகக்கவசங்கள் வழங்குவதாக முடிவெடுத்து, ஆகஸ்டு 5-ம் தேதி முதல் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.