தற்போதைய செய்திகள்

ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் பால் குளிர்வு நிலையம் – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்

திருப்பூர்

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குறிச்சி ஊராட்சி பகுதியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பால் குளிர்வு நிலையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன் தலைமையில், பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் முன்னிலையில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நேற்று திறந்து வைத்தார்.

பின்னர் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் செயல்படும் முதலமைச்சர் தமிழக மக்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்புடன் செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் பெண்களின் முன்னேற்றத்திற்காக நடப்பாண்டிற்கு தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் அறிவுறுத்தலின் படி, சுமார் 3.12 லட்சம் மகளிருக்கு விலையில்லா வெள்ளாடுகள், கறவை பசுக்கள் மற்றும் விலையில்லா நாட்டுக்கோழிகள் வழங்கப்படவுள்ளது.

மேலும், ஆசியா கண்டத்திலேயே இல்லாத வகையில் சேலம் தலைவாசல் பகுதியில் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் கால்நடை பூங்கா அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. கால்நடை மருத்துவக்கல்லூரிக்கான மாணவர் சேர்க்கை விரைவில் துவங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், விவசாய வேளாண்பெருங்குடி மக்கள் பயன்பெறும் வகையில் கோயமுத்தூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களிலிருந்து பிரித்து திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் கடந்த 17.12.2018 முதல் தொடங்கப்பட்டு சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. நமது மாவட்டத்திலுள்ள 9 வட்டங்களை எல்லையாக கொண்டு சுமார் 446 சங்கங்களிலிருந்து தற்போது நாளொன்றுக்கு சராசரியாக 26,00,000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

மேலும், திருப்பூர் ஒன்றியத்தில் தற்போது 31 தொகுப்பு பால் குளிர்வு மையங்கள் உள்ளன. இவைகளின் மூலமாக நாளொன்றுக்கு சுமார் 1,50,000 லிட்டர் பால் கையாளப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து, நேற்று ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்திற்குடப்டட குறிச்சி மற்றும் பள்ளத்தோட்டம் ஆகிய பகுதிகளில் விவசாயிகளின் சிரமங்களை குறைக்கும் வகையில் நபார்டு திட்டத்தின் கீழ் தலா ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய தொகுப்பு பால் குளிர்வு நிலையம் துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக இப்பகுதியில் உள்ள விவசாயிகளின் பால் அனைத்தும் கொள்முதல் செய்யப்படுவதோடு அவற்றை நல்ல தரம் மற்றும் சுகாதாரமான முறையில் சேகரிப்பதற்கு இந்த மையங்கள் பெரு உதவியாக திகழும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், இப்பகுதியில் உள்ள அனைத்து விவசாய பெருங்குடி மக்களும் அவரவர் பகுதியில் உள்ள பால் கூட்டுறவு சங்கங்களில் தங்களை இணைத்துக்கொண்டு அதன் மூலம் ஆவின் நிறுவனத்திற்கு அதிகளவில் பால் வழங்கி தங்களது பொருளாதாரத்தினை பெருக்கி கொண்டு பயன்பெற வேண்டுமெனவும் வேளாண் பெருங்குடி மக்களின் வளர்ச்சிக்காக அரசு அளிக்கின்ற நலத்திட்ட உதவிகளை நல்ல முறையில் பெற்றுக்கொண்டு பயன்பெற வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தொடர்ந்து, ஊத்துக்குளி வட்டத்திற்குட்பட்ட வேலம்பாளையம், பள்ளத்தோட்டம் பகுதியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பால் குளிர்வு நிலையத்தினையும் அமைச்சர் திறந்து வைத்தார்.
முன்னதாக, குறிச்சி ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள கால்நடை மருந்தகத்தினையும் அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து கால்நடைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார்.