தற்போதைய செய்திகள்

தி.மு.க. அரசின் ஊழல்களை தொகுத்து மத்திய அரசுக்கு விரைவில் அனுப்புவோம்

சென்னை

தி.மு.க. அரசின் ஊழல்களை தொகுத்து மத்திய அரசுக்கு விரைவில் அனுப்புவோம் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

சென்னை ராயபுரம் அரத்தூண் பகுதியில் கழக அமைப்பு செயலாளருமத், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் பேட்டி அளிக்கும்போது ஒவ்வொரு முறையும் ஆளும் கட்சி குறித்து குறிப்பிடுகிறேன். பொதுமக்கள் இதனை
புரிந்து கொள்ள வேண்டும். தற்போது சொத்து வரியை உயர்த்தி ஓட்டு போட்ட மக்களுக்கு பம்பர் பரிசு அளித்துள்ளனர். ஆட்சிக்கு வந்தவுடன் பொருளாதார நிபுணர்களை நியமித்தார்கள். இவர்கள் என்ன செய்கிறார்கள்.

மின் கட்டணத்தை பொறுத்தவரை மாதம் ஒரு முறை என்று தேர்தல் வாக்குறுதி அளித்தார்கள். இதனையும் நடைமுறைப் படுத்தவில்லை. இதுவும் ஒரு பம்பர் பரிசாக மக்களுக்கு காத்துக்கொண்டிருக்கிறது. பஸ் கட்டண உயர்வும் பம்பர் பரிசாக
காத்துக் கொண்டிருக்கிறது. பால் விலை உயர்வும் காத்துக் கொண்டிருக்கிறது.

எனவே தற்போது ஒரு மக்கள் விரோத ஆட்சி தான் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. பொருளாதார நிபுணர்களை நியமித்து 300 நாட்கள் ஆகிறது. இவர்களால் என்ன பலன். 300 நாட்களில் எந்த ஒரு முன்னேற்றத்திற்கும் வழி வகுக்காமல், ஆட்சி
போகும் போக்கை பார்த்தால் 2026-ம் ஆண்டில் இந்த ஆட்சியின் கடன் ரூ.5 லட்சம் கோடியாக உருவாகும்.

நிர்வாகத்தை செம்மைப்படுத்தாமல், சீர்படுத்தாமல் மக்களுக்கு சுமை இல்லாமல் செய்ய வேண்டும். மக்களுக்கு சுமை இருக்கக்கூடாது. ஆனால் அதே நேரத்தில் பொருளாதாரத்தையும் உயர்த்த வேண்டும்.

எங்களை பொறுத்தவரை அம்மாவின் அரசும், எடப்பாடியார் அரசும் மக்களுக்கு எந்த சுமையும் தரவில்லை. நாங்கள் பேருந்து கட்டணத்தை உயர்த்தவில்லை. மின் கட்டத்தை உயர்த்தவில்லை. சொத்து வரியை ஏற்றவில்லை. பால் விலையை ஏற்றவில்லை. அப்படி என்றால் நாங்கள் நல்ல நிர்வாகியா.இவர்கள் நல்ல நிர்வாகியா.

இந்த சொத்து வரி குறித்து அம்மா அரசில் ஒரு கருத்துரு வந்தது.இது குறித்து மக்களிடம் விளம்பரப்படுத்தி கேட்டபோது அப்போது வானத்திற்கும் பூமிக்கும் குதித்தார் ஸ்டாலின். இது சொத்து வரியா, சொத்தை அபகரிக்கும் வரியா என்று கேட்டார். இப்போது இது சொத்தை அபகரிக்கும் வரிதானே? 25 சதவீதத்திலிருந்து 150 சதவீத வரி என்றால் மக்கள் தாங்குவார்களா.

இதனை இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் அறிவித்துள்ளனர். ஏன் பகலில் தர வேண்டியது தானே? இந்த அறிவிப்பை பகலில் அளித்தால் மனசாட்சி உள்ள ஊடகங்கள் இதனை வெளிப்படுத்துவார்கள். மனசாட்சி இல்லாத ஊடகங்கள் வெளிப்படுத்த மாட்டார்கள். இரவு 11 மணிக்கு சொத்து வரி குறித்து அறிவிப்பை வெளியிட்ட ஒரே கட்சி திமுக., ஒரே ஆட்சி தி.மு.க. ஆட்சி.

கேள்வி:- பா.ஜ.க. செய்யும் பணியை அ.தி.மு.க. செய்கிறது. அ.தி.மு.க. செய்ய வேண்டிய பணியை பா.ஜ.க. செய்கிறது என்ற விமர்சனம் உள்ளதே?

பதில்:- இது தவறு .எத்தனை ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளோம். கிட்டத்தட்ட மூன்று ஆர்ப்பாட்டங்களை நடத்தி விட்டோம். மக்கள் விரோத போக்கை கண்டித்து தான் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர்கள் தொடர்ந்து பேட்டி அளிக்கிறார்கள். அறிக்கை விடுகிறார்கள்.

ஏற்கனவே இருந்த தி.மு.க. அரசு விஞ்ஞானப் பூர்வமான ஊழல் செய்தது. உர பேர ஊழல், சர்க்கரை பேர ஊழல், கோதுமை பேர ஊழல் அனைத்தையும் தொகுத்த சர்க்காரிய கமிஷன்
அறிக்கையை புரட்சித்தலைவர் மத்திய அரசுக்கு அனுப்பினார். அதுபோன்று கழகத்தின் சார்பில் தற்போதைய தி.மு.க. அரசின் அனைத்து ஊழல்களையும் தொகுத்து மத்திய அரசுக்கு அனுப்பும் பணி விரைவில் தொடங்கும்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.