தற்போதைய செய்திகள்

ராயபுரம் தொகுதியில் ஸ்டாலின் டெபாசிட் கூட வாங்கமாட்டார் – அமைச்சர் டி.ஜெயக்குமார் சவால்

சென்னை

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ராயபுரம் தொகுதியில் தன்னோடு போட்டி போட தயாரா? போட்டியிட்டால் ஸ்டாலின் டெபாசிட் கூட வாங்கமாட்டார் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பாரத் தியேட்டர் பகுதியில் புதியதாக கட்டுப்பட்டுள்ள ஈம சடங்கு செய்யும் கட்டடத்தை மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் திறந்து வைத்து செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

ஸ்டாலின் ராயபுரம் தொகுதியில் நிற்க வேண்டும் என்பதே என் ஆசை, நின்று என்னை ஜெயித்து காண்பிக்க முடியுமா? திராணி, தெம்பு இருந்தால் ராயபுரம் தொகுதியில் ஸ்டாலின் தேர்தலில் நிற்க வேண்டும், நின்றால் டெபாசிட் கூட ஸ்டாலின் வாங்க மாட்டார் என்றும் விமர்சனம் செய்தார்.

மேலும் விவசாயிகளின் நண்பன் கழகம் தான் என்று குறிப்பிட்ட அவர், குடும்பத்தை வளப்படுத்தும் வேலையை தான் 17 ஆண்டுகளாக திமுக செய்து வருவதாகவும், தமிழ்நாட்டிற்கு கேடு விளைவித்து உரிமைகளை தாரை வார்த்து விட்டு கொத்தடிமையாக திமுக இருந்ததாகவும், விவசாயிகள் தொடர்பாக திமுக பேசுவது தேர்தலுக்காக மட்டுமே என்றும் குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து கோகுல இந்திரா கருத்திற்கு, பெண்களை பற்றி பேசியதற்காகவே கருத்து கூறியுள்ளார். என்றும் பெண்களை யார் இழிவுப்படுத்தினாலும் அதை ஏற்க முடியாது எனவும், அரசியல் வருகை தொடர்பாக அவர் கருத்து கூற வில்லை, சசிகலா விடுதலை பற்றிய கேள்விக்கு அவர் விடுதலை அதிமுகவிற்கு எந்த தாக்கமும் ஏற்படாது என்றும் தெரிவித்தார்.

பெண்களை இழிவுப்படுத்தி பேசுபவர்கள் தீண்டதகாதவர்கள் என்று கூறிய அவர், ஸ்டாலின் அரை வேக்காடு என்றும், உதயநிதி திமுகவில் முளைத்த காளாண் எனவும் அவர் கால்வேக்காடு என்று கடுமையாக சாடினார்,அனைவருக்கும் நிழல் தரும் இயக்கம் கழகம் என்றும், கழகம் என்னும் ஆலமரத்தின் கீழ் தான் அனைவரும் இளைப்பாற முடியுமே தவிர, திமுகவில் இளைப்பாற முடியாது. கழகத்தினர் எங்கும் செல்ல மாட்டோம் என்றும் உறுதிப்பட கூறினார்.

திமுக ஊழலில் ஊறிய சாக்கடை என்று விமர்சித்த அவர், கங்கை, காவேரி போன்ற புனித நீர் ஓட்டம் தான் கழகம் என்றும், “நதி போல ஓடிக்கொண்டிரு” என்ற பாடல் போல் கழகம் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும்.

இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசினார்.

பேட்டியின் போது பகுதி கழக செயலாளர் எ.டி.அரசு, மகேஷ், மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ்.எஸ்.கே.கோபால், பா.சங்கர், சென்னை மாநகராட்சி அதிகாரி சொக்கலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.