தற்போதைய செய்திகள்

வடபழஞ்சி தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில் கோவிட் கேர் சென்டர் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆய்வு

மதுரை

மதுரை மாவட்டம், வடபழஞ்சி தொழில்நுட்ப பூங்கா (எல்காட்) வளாகத்தில் உள்ள கோவிட் கேர் சென்டரை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்ததாவது:-

முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் பொதுமக்கள் நான் நலம்பெற வேண்டி செய்த பிரார்த்தனைகளுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். கொரோனா தொற்று குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. ஒருவேளை தொற்று ஏற்பட்டுவிட்டால் அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டால் போதும் என்றும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள உரிய வசதி இல்லாதவர்கள் கோவிட் கேர் சென்டர்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்ததாவது:-

புரட்சித்தலைவி அம்மாவின் அரசை தலைமை தாங்கி வழிநடத்தி வருகின்ற தமிழ்நாடு முதலமைச்சர் மேற்கொள்ளும் தீவிர நடவடிக்கையின் காரணமாக கொரேனா நோய்த் தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும், சிகிச்சைகளை வழங்கி மற்றும் நிவாரணங்கள் வழங்கி வருகிறார்கள் என்பதை தாய்த்தமிழ் நாட்டு மக்கள் நன்றாக அறிவார். தமிழ்நாட்டில் சிகிச்சைக்கு பின் வீடு திரும்புவோர் சதவிகிதம் நாட்டிலேயே அதிகமாகவும், நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு மிகவும் குறைவாகவும் இருந்து வருவது ஆறுதலான செய்தியாகும்.

பல்வேறு தினங்களில் முதலமைச்சர் நடத்திய ஆய்வுக் கூட்டங்களிலே, குறிப்பாக கடந்த 29.07.2020 அன்று நடத்தப்பட்ட காணொலிக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையிலும், நேற்றைய தினம் மருத்துவர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுனர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களை கலந்தாலோசித்தும் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் 31.07.2020 முடிய தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் 31.08.2020 முடிய தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு நடைமுறை படுத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

கட்டுப்பாடுகள் குறித்தும், தளர்வுகள் குறித்தும் முதலமைச்சர் விரிவான அறிக்கையையும் வெளியிட்டுள்ளார். ஆகஸ்ட் மாதத்தின் அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும் எவ்வித தளர்வுமின்றி ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என்றும், நோய்த் தொற்றின் தீவிரத்தை பொறுத்து கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கக்கூடிய வகையில் மீண்டும் பொதுப்பணியை இன்றிலிருந்து துவங்கியிருக்கின்ற கூட்டுறவுத்துறை அமைச்சர் கோவிட் கேர் சென்டர்களில் உள்ள வசதிகளை ஆய்வு செய்யவுள்ளனர். அவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும், அனைவரின் சார்பிலும் வரவேற்பையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். முதலமைச்சரும், அமைச்சர்களும் பிராத்தனை மேற்கொண்டதன் பலனாக இன்றைக்கு பூரண நலத்துடன் திரும்பியுள்ளார்.

மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 21 கோவிட் கேர் சென்டர்களை மாவட்ட நிர்வாகம் தயார்நிலையில்; வைத்துள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் , மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் மற்றும் கூடுதல் ஆட்சியர் அவர்களின் தீவிர கண்காணிப்பில் பிற மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாக வேளாண்மை பல்கலைக்கழகம், காமராஜர் பல்கலைக்கழகம், தியாகராஜர் பொறியியல் கல்லூரி, தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனை மற்றும் காவல்துறைக்கென தனியாக உள்ள கோவிட் கேர் சென்டர் உள்ளிட்ட 5 கோவிட் கேர் சென்டர்கள் அனைத்து வசதிகளுடன் தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

தற்போது கல்லூரிகள் திறக்கப்பட வேண்டிய சூழ்நிலை வந்தால் மாற்று ஏற்பாடாக தகவல் தொழில் நுட்பத்துறை (எல்காட்) கட்டடத்தை 900 படுக்கைகள் கொண்ட கோவிட் கேர் சென்டராக மாற்ற ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தென் தமிழகத்தின் தலைநகராக இருக்கின்ற மதுரையில் முதலமைச்சர் வருகிற 6-ஆம் தேதி நேரிலே ஆய்வு செய்து நோய்த் தடுப்பு பணிகள், மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், அறிவுரைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கவுள்ளார்.

மதுரை மாவட்டத்தில் படுக்கை வசதிகளை பொறுத்தவரை அனைத்து அரசு மருத்துவமனைகளையும் சேர்த்து 1,937 படுக்கைகளும், தனியார் மருத்துவமனைகளில் 591 படுக்கைகளும் மற்றும் கோவிட் கேர் சென்டர்களில் 4,000 படுக்கைகளும் தயார்நிலையில் உள்ளன. மதுரை மாவட்டம் பிற மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது. 7,590 தீவிர காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தப்பட்டுள்ளது. இம்முகாம்களில் பங்கேற்ற 3,08,533 நபர்களில் 35,758 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. மதுரை மாவட்டம் தற்போது பாதுகாப்பாக இருக்கிறது.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.டி.ஜி.வினய், மாநகராட்சி ஆணையாளர் விசாகன், கூடுதல் ஆட்சியர் பிரியங்கா, சட்டமன்ற உறுப்பினர்கள்மாணிக்கம் (சோழவந்தான்), பெரியபுள்ளான் (மேலூர்), செயற்பொறியாளர் இந்துமதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.