தற்போதைய செய்திகள்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர், பொதக்குடி, கொரடாச்சேரி ஆகிய பகுதிகளில் மருத்துவ முகாம் – அமைச்சர் ஆர்.காமராஜ் தொடங்கி வைத்து பார்வையிட்டார்

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர், பொதக்குடி, கொரடாச்சேரி, மற்றும் திருவாரூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மருத்துவ முகாமினை உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு முககவசம், கபசுரகுடிநீர் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் த.ஆனந்த் தலைமை வகித்தார்.

பின்னர் அமைச்சர் ஆர்.காமராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

கொரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க அம்மா வழியில் செயல்படும் முதல்வர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அறிவித்து உறுதியாக இருந்து செயல்படுத்தி வருகிறார். கொரோனா வைரஸ் நோய்தொற்றிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக பல்வேறு நிலைகளில் குழுக்களை அமைத்து அவர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கியும் வல்லுநர்கள் குழு கூறும் ஆலோசனைகளை ஏற்று போர்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

ஆகையால் நம்மை நாம் பாதுகாத்து கொள்ள வேண்டும். இந்த கொரோனா வைரஸ் தொற்றிற்கு ஆட்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு தங்களை பாதுகாத்துக்கொள்ள அனைவரும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கட்டாயம் முகக்கவசம் அணிந்து வெளியில் செல்ல வேண்டும், அடிக்கடி கைகழுவுதல், தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது போன்ற நடவடிக்கைகளால் இந்த நோய் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.

இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை. மேலும் நோய்தொற்று வராமல் பாதுகாக்க வேண்டும் அப்படி வந்தால் அவருக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும் ஆகியவைகளை தமிழக அரசு திறம்பட மேற்கொண்டு வருகின்றது. அதனால் இந்த நோய் குறித்து அச்சப்பட தேவையில்லை. ஆனால் பாதுகாப்பாக இருக்கவேண்டும்.

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1665. ஆனால் மருத்துமனையில் சிகிச்சையில் உள்ளவர்கள் 200 நபர்கள்தான் உள்ளனர். மீத நபர்கள் குணமடைந்து வீட்டிற்கு சென்று விட்டனர். குணமடைந்து வீடுகளுக்கு செல்வோர் எண்ணிக்கை நாளுக்குநாள் கூடுதலாகி கொண்டிருக்கிறது, இறப்பு சதவீதம் மிககுறைவு, மேலும் நமது மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 1500 நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டு தயாராக உள்ளது. எல்லா காலங்களிலும் மக்களுக்கு உதவுவதற்கும், மக்களை பாதுகாப்பதற்கும் தமிழகஅரசு உள்ளது.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர்கள் புண்ணியகோட்டி, ஜெயபீரித்தா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சந்தானம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை துணை இயக்குநர் மரு.விஜயகுமார், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.