சிறப்பு செய்திகள்

மும்பை தமிழ் மாணவர்கள் அனைவரும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி – முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை

இதுதொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை வாழ் தமிழ் மாணவர்களின் நலன் கருதி, தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வினை மும்பையிலேயே எழுதிடும் வகையில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, அதன்படி மும்பையில் உள்ள பிரைட் உயர்நிலைப்பள்ளி, பாண்டூர் மற்றும் ஸ்டார் ஆங்கிலப்பள்ளி, சீத்தா கேம்ப் ஆகிய பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைத்து, அரசு தேர்வுகள் இயக்ககம் வாயிலாக, தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் பொதுத்தேர்வுகளை நடத்தி வருகின்றது.மும்பையில் தமிழ் வழியில் தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தில் பயின்ற 69 பள்ளி மாணவர்கள் இத்தேர்வு மையங்களில் 2019-20ம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிட பதிவு செய்துள்ளனர்.

இந்த ஆண்டு கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து பள்ளி மாணவர்களைக் காத்திடும் பொருட்டு, தமிழ்நாட்டில் நடக்கவிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டு, மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு அவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளில் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80% மதிப்பெண்களும் வருகைப் பதிவின் அடிப்படையில் 20% மதிப்பெண்களும் வழங்கப்படும் என நான் 9.6.2020 அன்று உத்தரவிட்டிருந்தேன்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட காரணத்தால், மும்பை தேர்வு மையத்தில் பதிவு செய்த, தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தில் பயின்ற 69 பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுகிறது. மேலும், அவர்தம் மதிப்பெண்கள் 9.6.2020 அன்று அறிவிக்கப்பட்ட நடைமுறையின்படி வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்”.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.