சிறப்பு செய்திகள்

பழங்குடியின குடும்பங்களை சார்ந்தவர்களுக்கு ரூ.4.02 கோடியில் அரசின் நலத்திட்ட உதவிகள் – துணை முதலமைச்சர் வழங்கினார்

தேனி

தேனி மாவட்டம், சோத்துப்பாறை அணை பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ், முன்னிலையில் நடைபெற்ற அரசு விழாவில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பழங்குடியின குடும்பங்களைச் சார்ந்தவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி, வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடங்கி வைத்து பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழக மக்களின் வாழ்வில் வளம் பெறச் செய்ய வேண்டும் என்பதற்காக எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை தீட்டி திறம்பட செயல்படுத்தி வந்தார்கள். அதனைத்தொடர்ந்து, அம்மா அவர்களின் தமிழக அரசு அம்மா செயல்படுத்திய திட்டங்கள் மட்டுமல்லாமல் தொடர்ந்து புதியதாகவும் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தமிழக அரசு மனித வாழ்விற்கு அடிப்படை தேவைகளில் ஒன்றான உணவிற்கு உத்திரவாதம் அளித்திடும் வகையில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா அரிசியினையும், உடுத்தும் உடைக்கு உத்தரவாதம் அளித்திடும் வகையில் விலையில்லா வேட்டி, சேலைகளையும், இருப்பிடத்திற்கு உத்தரவாதம் அளித்திடும் வகையில் முதலமைச்சரின் சூரிய ஒளி சக்தியுடன் கூடிய பசுமை வீடு கட்டும் திட்டம், அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் போன்ற திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி பொதுமக்களை பயன்பெறச் செய்து வருகிறது.

மேலும், பெண் கல்வியை ஊக்கப்படுத்திடவும், ஏழ்மையின் காரணமாக பெண்களின் திருமணம் காலதாமதம் ஏற்படக்கூடாது என்பதற்காவும் தமிழக அரசு ஏழை பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி மற்றும் திருமாங்கல்யம் வழங்கும் திட்டத்தின் கீழ் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு படித்த பெண்களுக்கு ரூ.25,000 நிதியுதவியும், 8 கிராம் திருமாங்கல்யத்திற்கு தங்கமும், பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு படித்த பெண்களுக்கு ரூ.50,000 நிதியுதவியும் 8 கிராம் திருமாங்கல்யத்திற்கு தங்கமும்,

கருவுற்ற காலங்களில் ஏற்படுகின்ற வருவாய் இழப்பினை ஈடு செய்திடும் பொருட்டு, கர்ப்பிணித்தாய்மார்கள் நல்ல சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதனைக் கருத்தில் கொண்டு, டாக்டர். முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் மூலம் ரூ.12,000 மாக வழங்கப்பட்ட வந்த நிதியுதவியினை தற்போது ரூ.18,000 மாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இதுபோன்று எண்ணற்ற திட்டங்கள் பெண்களின் முன்னேற்றத்திற்காகவே செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், அம்மா அவர்களின் தமிழக அரசு பழங்குடியின மக்கள் அனைத்து வகையிலும் சமுதாய பொருளாதார முன்னேற்றம் அடையச் செய்ய வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வேளாண்மைத்துறை போன்ற பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, அவர்களது வாழ்வை வளம் பெறச் செய்து வருகிறது.

தேனி மாவட்டம் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளதால், மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூர், ஆண்டிபட்டி, பெரியகுளம் மற்றும் உத்தமபாளையம் ஆகிய வட்டங்களில் சுமார் 19 கிராமங்களில் மலைவாழ் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திடும் வகையில் அவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, சாலை வசதி, மின் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் அனைத்தும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதில், மேலப்பரவு பகுதியில் வசிக்கின்ற பழங்குடியின மக்களுக்கு ரூ.2.09 கோடி மதிப்பீட்டிலும், ஆண்டிபட்டி வட்டத்திற்குட்பட்ட வேலப்பர் கோயில் பகுதியில் வசிக்கின்ற பழங்குடியின மக்களுக்கு ரூ.1.13 கோடி மதிப்பீட்டிலும் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து, இன்றைய தினம் போடிநாயக்கனூர் வட்டம், அகமலை ஊராட்சிக்குட்பட்ட சொக்கனலை, பட்டூர், குறவன்குழி, கரும்பாறை மற்றும் சூழ்ந்தகாடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 71 பழங்குடியின மக்களின் குடும்பங்களைச் சார்ந்தவர்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.2.68 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு, மேலும், மலைவாழ் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்ற பகுதிகளில் உட்கட்டமைப்பு சாலை, உயர்மட்ட பாலம், துணை சுகாதார நிலையம் போன்ற பணிகளுக்குகென ரூ.1.34 கோடி மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகள் என மொத்தம் ரூ.4.02 கோடி மதிப்பீட்டிலும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் தேவைகளை அறிந்து, திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி, மக்களுக்கவே செயல்பட்டு வருகின்ற அரசாக அம்மா அவர்களின் தமிழக அரசு திகழ்ந்து வருகிறது. எனவே அனைத்துத்தரப்பு மக்களும் அம்மா அவர்களின் அரசிற்கு தொடர்ந்து தங்களது பேராதரவினை அளித்திட வேண்டும் என தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, கண்ணக்கரையில் ரூ.30.00 லட்சம் மதிப்பீட்டில் அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கான கட்டுமானப்பணிகளுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்து, முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

மேலும், சோத்துப்பறையிலிருந்து ஊரடி, ஊத்துக்காடு, பேச்சியம்மாள் சோலை, சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட 7 மலை கிராமப்பகுதிகளில் சாலை வசதி மேம்பாட்டு பணிகள் குறித்து துணை முதலமைச்சர் அவர்கள் நேரடியாக சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் துறை அலுவலர்களுடன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து பெரியகுளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மராமத்து பணிகள் மற்றும் கூடுதலாக புதிய கட்டிடங்கள் கட்டுவது தொடர்பாக வரப்பெற்ற கோரிக்கைக்கிணங்க ஆய்வு மேற்கொண்டு, நிதி ஒதுக்கீட்டின்படி பணிகள் மேற்கொள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வுகளின் போது, மாவட்ட வன அலுவலர் எஸ்.கௌதம், மாவட்ட ஊராட்சித்தலைவர் க.ப்ரிதா, மாவட்ட வருவாய் அலுவலர் க.ரமேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பெ.திலகவதி, செயற்பொறியாளர் எஸ்.கவிதா, மகளிர் திட்ட அலுவலர் சிவக்குமார், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.செந்தில்குமார். போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் சுதா மூர்த்தி, அகமலை ஊராட்சி மன்றத்தலைவர் லதா, வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.