கோவை தொண்டாமுத்தூர் அருகே 8 அரசு பேருந்துகள் சிறைபிடிப்பு-பொதுமக்கள்- கல்லூரி மாணவிகள் போராட்டம்

கோவை
சரியான நேரத்திற்கு பேருந்துகள் இயக்கப்படாததால் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே 8 அரசு பேருந்துகளை பொதுமக்கள், கல்லூரி மாணவிகள் சிறைபிடித்து மறியல் போராட்டம் நடத்தினர்.
கோவை தொண்டாமுத்தூர், நரசீபுரம், தேவராயபுரம் பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினலட வசித்து வருகின்றனர். இங்கிருந்து தினமும் பள்ளி, கல்லூரி, மற்றும் வியாபாரம், பணிக்கு செல்வோர் பேருந்துகளில் சென்று வருகின்றனர்.
தொண்டாமுத்தூர் பகுதிகளில் இரண்டு கல்லூரிகள் செயல்பட்டு வரும் நிலையில் காலை 10 மணிக்கு மேல் சரியான நேரத்திற்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் நீண்டநேரம் காத்திருந்து பொதுமக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்புகின்றனர். சில நேரங்களில் நடந்து செல்கின்றனர்.
இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக மண்டல மேலாளரிடம் பலமுறை பொதுமக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் தொண்டாமுத்தூர் செலம்பனூர் பகுதிக்கு வந்த அரசு பேருந்தை சிறைபிடித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அடுத்தடுத்து வந்த பேருந்துகள் அனைத்தும் சிறை பிடிக்கப்பட்டது. மொத்தம் 8 பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு வந்த தொண்டாமுத்தூர் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதிகாரிகள் வந்து உறுதியளித்தால் மட்டுமே பேருந்துகளை விடுவிப்போம் என்று கூறி பொதுமக்கள் மறியல் போராட்டத்தை தொடர்ந்தனர்.
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு கோவை மாவட்டத்தை தி.மு.க புறக்கணித்து வருகிறது. இந்நிலையில் பேருந்துகளை முறையாக இயக்காமல் பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை அதிகாரிகள் ஏற்படுத்தி வருகின்றனர்.