சிறப்பு செய்திகள்

மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பது தான் லட்சியம்-எதிர்க்கட்சி தலைவர் உறுதி

சேலம்,
கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று சேலம் மாநகர் மாவட்டம், பழைய பேருந்து நிலையம் அருகேயும், சேலம் புறநகர் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்குட்பட்ட கொங்கணாபுரம் பேருந்து நிலையம் அருகேயும்,

எடப்பாடி பேருந்து நிலையம் அருகேயும், ஓமலூர் தொகுதிக்குட்பட்ட ஓமலூர் பேருந்து நிலையம் அருகேயும் கழகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தலை திறந்து பொதுமக்களுக்கு நீர், மோர், தர்பூசணி, வெள்ளரிக்காய், பழங்கள் ஆகியவற்றை வழங்கினார்.

ஓமலூரில் நீர், மோர் பந்தலை திறந்து வைத்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-

இன்றைக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் டெல்லி சென்ற பயணத்தை பற்றி பேசி இருக்கிறார். என்னை குறிப்பிட்டு பேசி இருக்கிறார். நாங்கள் ஆட்சியில் இருக்கும் பொழுது இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் டெல்லிக்கு சென்றபோது தமிழ்நாட்டு மக்களுக்கு என்னென்ன திட்டங்கள் தேவையோ, எந்தெந்த வகையில் நமக்கு நிதி தேவைப்பட்டதோ அதை வாதாடி போராடி பெற்றார்.

அம்மா மறைவிற்கு பிறகு நான் முதலமைச்சராக இருந்த காலகட்டத்திலும் அம்மாவுடைய அரசு தமிழகத்தில் சிறப்பான திட்டங்களை கொண்டு வருவதற்காகவும், நமக்கு கிடைக்க வேண்டிய நிதியை முழுவதுமாக பெறுவதற்காகவும் பாரத பிரதமரையும் மற்றும் மத்திய அமைச்சர்களையும் சந்தித்து பேசினோம்.

அப்போதெல்லாம் இன்றைய முதலமைச்சரும், அப்போதைய எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் பல விமர்சனங்களை செய்தார். டெல்லிக்கு கழகம் காவடி தூக்குகிறது, கழகம் பா.ஜ.க.வுக்கு அடிமையாக இருக்கிறது என்றெல்லாம் கடுமையாக விமர்சித்தார்.

நாங்கள் முதலமைச்சராக இருந்து பாரத பிரதமரை சந்தித்தால், மத்திய அமைச்சர்களை சந்தித்தால் இப்படிப்பட்ட பேச்சு, இப்பொழுது எந்த வகையிலே இப்பொழுது உள்ள முதலமைச்சர் ஸ்டாலினும், அவருடைய அமைச்சர்களும் பாரத பிரதமரையும், மத்திய அமைச்சர்களையும் சந்தித்திருக்கிறார்கள்? எந்த காவடியை தூக்கிக் கொண்டு சென்று பிரதமரை சந்தித்தார்? மத்திய அமைச்சர்களை சந்தித்தார். ஆகவே யாருக்கு யார் அடிமை என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள்.

என்றைக்கும் கழகத்தை பொறுத்த வரை மத்திய அரசுடன் இணக்கமான உறவு வைத்து மக்களுக்கு தேவையான திட்டங்களை பெறுவதிலே நாம் முதன்மையாக விளங்குகிறோம், கழகம் ஆட்சியில் இருக்கின்ற பொழுது தான் மத்திய அரசிடம் இருந்து ஏராளமான நிதிகளை பெற்று ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி மக்களுக்கு நன்மைகள் கிடைக்க செய்தோம்.

இன்றைக்கு கூட ராணுவ தளவாடங்கள் உற்பத்தி தொழிற்சாலை சேலத்தில் தொடங்கப்படும் என்ற அறிவிப்பினை மத்திய அரசாங்கம் வெளியிட்டு இருக்கிறது. அதேபோல அதிக அளவில் தரமான சாலைகள் தமிழகத்தில் கொடுக்க வேண்டும், உள்கட்டமைப்புகள் சிறந்து விளங்க வேண்டும், வளர்ந்து வருகின்ற தமிழ்நாடு மேலும் வளர வேண்டும், வளர்ச்சி பெற வேண்டும்,

வளர்ச்சி பெற்றால் தான் பொருளாதாரம் மேம்பாடு அடையும் அதற்காக பல்வேறு மாநில சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கு தேவையான நிதியும் கிடைக்கப் பெற்றுள்ளது.

இங்கே கூட திருச்செங்கோட்டில் இருந்து ஓமலூர் வரை நான்கு வழி சாலைக்கு அடிக்கல் நாட்டியது அம்மாவுடைய அரசாங்கம்., அந்த பணி எல்லாம் தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல ஓமலூரில் இருந்து மேச்சேரி வரை நான்கு வழி சாலை, ஈரோட்டில் இருந்து பவானி, பவானியில் இருந்து மேட்டூர், மேட்டூரிலிருந்து தொப்பூர் வரை இவையெல்லாம் கழக ஆட்சியில் கொண்டு வந்த சாலை திட்டங்கள்.

சாலைகளை அகலப்படுத்தி விபத்துக்களை குறைத்து பயண நேரத்தை குறைத்து எரிபொருள் மிச்சப்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்கின்ற ஒரு அற்புதமான திட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றிய அரசாங்கம் அம்மாவுடைய அரசாங்கம். இன்றைக்கு ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார் என்றால் அவர்களுடைய பிரச்சினையை தீர்ப்பதற்காக சென்றிருக்கிறார்.

அண்மையில் வெளிநாடு சென்று வந்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். வெளிநாடு எதற்கு சென்றார் என்று நாட்டு மக்கள் அனைவரும் பேசி கொண்டிருக்கிறார்கள், குடும்பமே துபாய்க்கு சென்றது .அங்கே என்ன பேசினார்கள் என்று பத்திரிகையிலும் தொலைக்காட்சிகளிலும் தினந்தோறும் செய்தி வந்த வண்ணம் இருக்கின்றன.

ஆகவே தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்கு சென்றாரா? அல்லது அவர்களுடைய குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்கள் தொழில் தொடங்குவதற்காக சென்றாரா? என்று மக்கள் இன்றைக்கு கேள்வி கேட்கின்ற நிலையை பார்க்கிறோம். அதுவும் அங்கே சர்வதேச கண்காட்சி நடைபெறுவதாக செய்தி வந்தன. அந்த சர்வதேச கண்காட்சியில் தமிழ்நாட்டின் சார்பாக அரங்கத்தை இங்கே இருக்கின்ற முதலமைச்சர் சென்று திறந்து வைத்தார்.

ஆனால் சர்வதேச கண்காட்சி 2021 பத்தாவது மாதமே தொடங்கப்பட்டு விட்டது. இவர் திறப்பு விழா செய்து 6 நாட்களில் மூட போகிறார்கள். ஆக இறுதி கட்டத்தில் சென்று தொடங்கி வைக்கிறார். இறுதி கட்டத்தில் பல அரங்குகளை காலி செய்து கொண்டிருக்கின்ற அந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ் நாட்டின் சார்பாக சர்வதேச கண்காட்சியில் ஒரு அரங்கத்தை திறந்து வைப்பது என்பது எவ்வளவு வேடிக்கையானது.

சர்வதேச கண்காட்சி தொடங்குகின்ற பொழுதே துபாய் சென்று திறந்து இருந்தால் பரவாயில்லை. ஆனால் ஏதோ ஒரு சாக்கை வைத்துக் கொண்டு துபாய் செல்வதற்காக இந்த அரங்கத்தை தொடங்கி வைப்பதாக ஒரு நாடகத்தை அரங்கேற்றி சென்று வந்திருக்கிறார். இதுதான் மக்களின் ஐயப்பாடு. இதையெல்லாம் மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து ஏதாவது நடவடிக்கை எடுத்து விடுவார்கள் என்று அஞ்சி தான் ஓடோடி சென்று பிரதமரையும், மத்திய அமைச்சரையும் பார்த்து விட்டு வருகிறார்.

அதோடு தங்கம் தென்னரசு வெளியிட்ட செய்தியில் ‘‘தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினும், நானும் பாதுகாப்புத்துறை அமைச்சரை சந்தித்தபொழுது அவர் எங்களை நன்றாக உபசரித்தார். எங்களை கவுரவத்தோடு நடத்தினார். முதலமைச்சர் ஸ்டாலின் காரில் ஏறுகின்ற பொழுது கார் வரை வந்து வழியனுப்பி வைத்து சென்றார்’’ என்று குறிப்பிட்டார்.

அவர்கள் அரசியல் நாகரீகம் தெரிந்தவர்கள். இதே பா.ஜ.க.வை சேர்ந்த பாரத பிரதமர் தமிழ்நாட்டிற்கு வந்த பொழுது கோ பேக் மோடி என்று தெரிவித்தவர் ஸ்டாலினும். தி.மு.க.வினரும். கருப்பு பலூன்களில் எல்லாம் கோ பேக் மோடி என்று எழுதி பறக்க விட்டனர். அரசியல் நாகரிகம் தெரியாத கட்சி தி.மு.க. கட்சி. அரசியல் நாகரிகம் தெரியாத ஒரு முதலமைச்சர் ஸ்டாலின். பா.ஜ.க.வினருக்கும், திமுகவினருக்கும் எவ்வளவு வித்தியாசம் என்று பாருங்கள். இவர்களை இவர்களே பாராட்டி கொள்கிறார்கள்.

வேறு யாரும் பாராட்டவில்லை. மத்திய அமைச்சர்களை பார்க்க செல்கின்ற பொழுது மிகப்பெரிய அளவில் உபசரித்தார்கள், மன மகிழ்ச்சியோடு வரவேற்றார்கள் என்று சொல்கிறார்கள். அவர்களுக்கு பெருந்தன்மை இருக்கிறது. இங்கே இருக்கின்ற தி.மு.க. தலைவர், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை என்பது தான் வேதனையான செய்தி. கழகத்தை பொறுத்தவரை மக்கள் சேவை செய்வதில் முதலிடத்தில் இருக்கிறது.

நாங்கள் ஆட்சியில் இருந்தாலும் இல்லா விட்டாலும், மக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பது தான் லட்சியம் என்று செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.