தற்போதைய செய்திகள்

நாமக்கல் மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் நடைபெறாமல் உடனுக்குடன் தடுக்க நடவடிக்கை – அமைச்சர் சரோஜா பெருமிதம்

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் நடைபெறாமல் உடனுக்குடன் தடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக அமைச்சர் சரோஜா தெரிவித்தார்.

சமூகநலம் மற்றும் சத்துணவுத்திட்டத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகள் துறை, சத்துணவுத்திட்டத்துறை, சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த வளர்ச்சித்திட்டத்துறை, குழந்தைகள் நலக்குழு ஆகிய துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் காவல் கண்காணிப்பாளர் ச.சக்திகணேசன் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் கா.மெகராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் மருத்துவர் வெ.சரோஜா கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கை பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

இக்கூட்டத்தில் அமைச்சர் மருத்துவர்.வெ.சரோஜா பேசியதாவது.

கொரோனா நோய்த்தொற்று தடுப்பு பணியில் மாற்றுத்திறனாளிகள் துறையின் மூலம் நாமக்கல் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் இதுவரை 18,846 மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணத்தொகையாக தலா ரூ.1,000 வழங்கப்பட்டுள்ளது. சத்துணவுத்திட்டத்துறையின் மூலம் சத்துணவு வழங்கப்பட்டு வரும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் ஆகிய உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

குழந்தை நலக்குழுவின் மூலம் குழந்தை திருமணங்கள் நடைபெறாத வண்ணம் உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. குழந்தை திருமணங்கள் குறித்த தகவல் தெரிய வருபவர்கள் நாமக்கல் மாவட்ட குழந்தை நலக்குழுவிற்கு தெரிவித்து அதனை தடுக்க தங்களது சமுதாய பங்களிப்பை வழங்க வேண்டும்.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்துறையின் அங்கன்வாடி பணியாளர்களுக்கு தங்கள் பகுதியில் உள்ள கர்ப்பிணித்தாய்மார்களின் விவரங்களை பதிவேற்றம் செய்ய போசன் அபியான் திட்டத்தின் மூலம் பலசெயல்திறன் அலைபேசிகள் வழங்கப்பட்டுள்ளன.

கொரோனா நோய்த்தொற்று தடுப்பு பணியில் அங்கன்வாடி பணியாளர்கள் தங்கள் பகுதியில் உள்ள சுகாதாரத்துறை ஆய்வாளர்களுடன் இணைந்து இருதய நோய் பாதிக்கப்பட்டவர்கள், சிறுநீரக நோய் பாதிப்பிற்குள்ளானவர்கள், மூச்சுத்திணறல் உள்ள நபர்கள், நீரிழிவு நோயாளிகள் ஆகியவர்களின் பெயர் விவரங்களை சேகரித்து வழங்கி வருவதுடன், அவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்க ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றார்கள்.

மேலும் போசன் அபியான் நாமக்கல் என்ற யூடியூப் இணையதளத்தின் வாயிலாக பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவை பின்பற்ற அறிவுரைகளும் வழங்கப்படுவதுடன், போட்டிகளும் நடத்தப்பட்டு அடிக்கடி கைகழுவுதல், முகக்கவசம் அணிதல், தேவையின்றி வெளியே செல்லாமல் இருத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

இவ்வாறு அமைச்சர் .வெ.சரோஜா தெரிவித்தார்.

பின்னர், நாமக்கல் மாவட்டம் எர்ணாபுரம் தனியார் நிறுவன கிடங்கியில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக 150 நபர்கள் தங்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தும் மையத்தை அமைச்சர் வெ.சரோஜா பார்வையிட்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மாலா, மாவட்ட சமூக நல அலுவலர் கீதா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் ஜான்சி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் ஜான்சிராணி, குழந்தை நலக்குழு தலைவர் கோகிலவாணி உள்பட அரசு அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.