தற்போதைய செய்திகள்

ரூ.2 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் அரசு துணை சுகாதார நிலையங்கள்- அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பூமிபூஜை தொடங்கி வைத்தார்

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில் ரூ.2 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் அரசு துணை சுகாதார நிலையக் கட்டடங்களுக்கான பூமிபூஜையினை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். மாவட்ட ஆட்சித் தலைவர் பிரவீன்.பி.நாயர் தலைமை வகித்தார்.

பின்னர் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்ததாவது:-

“நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மொத்தம் 12 இடங்களில் தமிழ்நாடு அரசின் பொதுசுகாதாரம் மற்றம் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில் தலா ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிய அரசு துணை சுகாதார நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட செட்டிப்புலம் ஊராட்சியில், இடையார்காடு, கத்தரிப்புலம் ஊராட்சியில் பனையடிக்குத்தகை, புஷ்பவனம் ஊராட்சியில் கொத்தன்காடு, பெரியகுத்தகை ஊராட்சியில் மல்லன்காடு, கடிநெல்வயல் ஊராட்சியில் மேலக்காடு, ஆயக்காரன்புலம்-2 ஊராட்சியில் முதலியார்குத்தகை, பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி ஊராட்சியில் கூழையதேவன்காடு, பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் சப்பாணிக்காடு, வேதாரண்யம் நகராட்சியில் தோப்புத்துறை, அகஸ்தியம்பள்ளி, மறைஞாயநல்லூர் ஆகிய 11 இடங்களில் புதிய அரசு துணை சுகாதார நிலையங்கள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்படுகிறது.

இதன் கட்டுமானப் பணிகள் 3 மாத காலத்திற்குள் விரைந்து முடிக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும். அதனைத் தொடர்ந்து, அரசு செவிலியர்கள் இந்த துணை சுகாதார நிலையத்தில் தங்கி, இப்பகுதி மக்களின் அடிப்படை சுகாதாரத் தேவைகளை பூர்த்தி செய்வார்கள்.”

இவ்வாறு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.

இந்நிகழ்வுகளில் மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் ஆர்.கிரிதரன், வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கமலா அன்பழகன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் சுப்பையன், இ.திலிபன், துணை இயக்குநர்(சுகாதாரப் பணிகள்) மரு.சண்முகசுந்தரம், வட்டாட்சியர் முருகு, வட்டார வளர்ச்சி அலுவலர் வெற்றிச்செல்வன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.