தற்போதைய செய்திகள்

மரக்காணம் கழுவேலி ஏரி ரூ.161 கோடியில் புனரமைப்பு- அமைச்சர் சி.வி.சண்முகம் பூமிபூஜை

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை சார்பாக ரூ.161 கோடி மதிப்பீட்டில் கழுவேலி ஏரி புனரமைப்பு திட்டப்பணிகளை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம் கிழக்கு கடற்கரை பகுதியில் கழுவேலி ஏரி அமைந்துள்ளது. இதன் அகலம் 10.50 கி.மீ. நீளம் 12.80 கீ.மீசுமார் 70 சதுரகி.மீ நீர்பரப்பு உள்ள இந்த ஏரி 8 கி.மீ நீள முக துவாரத்தின் மூலம் எடையன்திட்டு கழுவேலியில் இணைகிறது. இந்த கழுவேலியானது 10 கி.மீ நீளத்திற்கு விரிந்து பின் மரக்காணத்தின் வடக்கே கடலுடன் சேர்கிறது.

இந்நிலையில் கழுவேலி ஏரியில் ரூ161.00 கோடி மதிப்பீட்டில் கட்டமைப்பு அமைத்து ஏரியை மீட்டெடுத்து தண்ணீரை தேக்குதல்,கடல் நீர் உட்புகுதலை தடுத்தல் மற்றும் கடல் நீரை உள்விடாமல் நன்னீரை சேமித்து பாசனத்திற்கு பயன்படுத்தும் தடுப்பணை அமைத்தல்,புதிய கரை அமைத்து மழைக்காலங்களில் வெள்ளநீரை சேமித்து நிலத்தடி நீரை மேம்படுத்துதல், ஏரியில் கொள்ளளவை அதிகப்படுத்துதல் உள்ளிட்ட மேம்பாடு பணிகள் நடைபெற உள்ளது.

கழுவேலி ஏரியை மேம்படுத்துவதன் மூலம் சுற்றுப்புறத்தில் உள்ள கிராமங்களான ஊரணி, வண்டிப்பாளையம், ஆத்திக்குப்பம், அனுமந்தை, கந்தாடு, கொள்ளிமேடு, திருக்கனூர், எம்.புதுப்பாக்கம், நடுக்குப்பம், ஓமிப்பேர், சித்தனப்பாக்கம், நாணகல்மேடு, தேவனந்தல், காரட்டை, அடசல் உள்ளிட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் மேலும், கழுவேலி ஏரியை சுற்றியுள்ள 51 நீர் பிடிப்புப் பகுதிகள் மூலம் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறுவர்.

அதன்படி பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை சார்பாக ரூ.161 கோடி மதிப்பீட்டில் கழுவேலி ஏரி புனரமைப்பு திட்டப் பணிகளை அமைச்சர் சி.வி.சண்முகம் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) ஸ்ரேயா.பி.சிங், திண்டிவனம் சார் ஆட்சியர் டாக்டர் எஸ்.அனு, மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், உதவிபொறியாளர்கள் சீனிவாசன், கனகராஜ், மரக்காணம் வட்டாட்சியர் உஷா, மரக்காணம் ஒன்றிய செயலாளர்கள் ரவிவர்மன், நடராஜன், நகர செயலாளர் கனகராஜ், விஜயாஅர்ச்சுனன், கழக நிர்வாகிகள் ராம்குமார், ஜெயகிருஷ்ணன், தீபம்குமார், ராமலிங்கம், ராஜா, சேகர், அன்பழகன் உள்ளிட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.