தற்போதைய செய்திகள்

12,028 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்- அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் 12,028 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்.

திருவண்ணாமலை நகராட்சி மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற அரசு விழாவில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம் மற்றும் போளூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 79 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் 12,028 மாணவ, மாணவிகளுக்கு ரூ.4.75 கோடி மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசியதாவது:-

புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில், முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் தமிழகத்தை அனைத்து துறைகளிலும் முன்னேற்றப் பாதையில் அழைத்து சென்றுள்ளனர். முதலமைச்சர் ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்து, அரசுப் பள்ளியில் படித்த காரணத்தால், அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவராக வேண்டும் என்ற கனவினை நனவாக்கும் வகையில் மருத்துவ சேர்க்கையில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கினார். அம்மாவின் அரசு பள்ளி கல்வித்துறைக்கு ரூ.34,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மாபெரும் கல்விப் புரட்சி ஏற்படுத்தி வருகிறது.

இவ்வாறு அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி, திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத் தலைவர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, திருவண்ணாமலை வருவாய் கோட்ட அலுவலர் ஸ்ரீதேவி, முதன்மை கல்வி அலுவலர் ச.அருள்செல்வம், மாவட்ட கல்வி அலுவலர்கள் பி.வேதப்பிரகாஷ், விஜயகுமார், ரா.கலைவாணி, உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.