தற்போதைய செய்திகள்

இடி, மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ.16 லட்சத்திற்கான காசோலை – அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மழையினால் இடி, மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.4 லட்சம் என 4 நபர்களுக்கு ரூ.16 லட்சத்திற்கான காசோலையினை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.

மேலும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா வைரஸ் நிவாரண நிதியாக 10 மாற்றுத்திறனாளிகளுக்கு 15 வகையான அத்தியாவசியப்பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக்கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் சிறப்பு மருத்துவ குழுக்கள் மூலம் கொரோனா நோய் தொற்று கண்டறியும் பணிகள் குறித்தும், நோய் தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நோய் எதிர்ப்பு சத்து மாத்திரைகள் மற்றும் கபசுரகுடிநீர் நாள்தோறும் வழங்கப்பட்டு வருவது குறித்தும், அப்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தேவையான அத்தியாவசியப்பொருட்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அவரவர் வசிக்கும் பகுதிகளுக்கே நேரடியாக சென்று வழங்கப்படுவது குறித்தும் அமைச்சர் சி.வி.சண்முகம் கேட்டறிந்தார்.

இந்நிகழ்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா.பி.சிங், வானூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.சக்ரபாணி, விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.முத்தமிழ்ச்செல்வன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வெ.மகேந்திரன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் குந்தவிதேவி, இணை இயக்குநர் சண்முகக்கனி, துணை இயக்குநர் செந்தில்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.