தி.மு.க அரசை கண்டித்து கழக கவுன்சிலர்கள் வெளிநடப்பு – திருப்பூர் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு

திருப்பூர்
சொத்து வரியை உயர்த்தியதற்கு கருப்பு பேட்ஜ் அணிந்து வந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்த கழக கவுன்சிலர்கள் தி.மு.க. அரசை கண்டித்து திருப்பூர் மாநகராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் பரபரப்பு நிலவியது.
திருப்பூர் மாநகராட்சியின் 2022-23-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தின் சொத்துவரியை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டிக்கும் வகையில் கழக கவுன்சிலர்கள் 18 பேரும் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர்.
அப்போது பட்ஜெட் உரையை தி.மு.க. மேயர் தினேஷ்குமார் வாசிக்க தொடங்கியதும் எதிர்க்கட்சிக்குழு தலைவரான அன்பகம் திருப்பதி பேசுகையில், தி.மு.க. அரசு மக்களை அதிகமாக பாதிக்கின்ற வகையில் சொத்து வரியை உயர்த்தி உள்ளது. கடந்த 1998-லும் சொத்துவரியை தி.மு.க. அரசு தான் உயர்த்தியது.
2008-ம் ஆண்டிலும் தி.மு.க. அரசு தான் சொத்து வரியை உயர்த்தியது. அ.தி.மு.க ஆட்சி காலத்தில் சொத்து வரி உயர்த்தப்படவில்லை.
மத்திய-மாநில அரசுகள் வரியை குறைத்துக்கொள்ள முடியும். சொத்து வரியை குறைக்க இந்த மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்படவில்லை. அதை கண்டித்து கழகம் சார்பில் வெளிநடப்பு செய்கிறோம் என்றார்.
அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி குழு தலைவர் அன்பகம் தலைமையில் துணைத்தலைவர் சாந்தி பாலசுப்பிரமணியம் செயலாளர், கவுன்சிலர் முத்துசாமி, துணை செயலாளர் தமிழ்ச்செல்வி கனகராஜ், மாமன்ற எதிர்க்கட்சி கொறடா எம்.கண்ணப்பன், துணை கொறடா ஆர்.ஏ.சேகர் உள்பட கழகத்தை சேர்ந்த 18 கவுன்சிலர்களும் மாநகராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அப்போது கழக கவுன்சிலர்கள், சொத்து வரியை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்தும், வரிய உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு நிலவியது.